திருப்பூர்,
இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறையை உயர்மதிப்பு கொண்ட சர்வதேச சந்தைகளுடன் மேலும் வலுப்படுத்தும் வகையில் பாரத் டெக்ஸ் டிரேட் பெடரேஷன் மற்றும் உலகின் முன்னணி சர்வதேச பேஷன் ஜவுளி மற்றும் கொள்முதல் தளமான பிரான்ஸ் நாட்டின் பிரீமியர் விஷன் எஸ்.ஏ. இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் பாரீசில் நடைபெற்ற கண்காட்சியில் நிறைவேற்றப்பட்டது.
பாரத் டெக்ஸ் டிரேட் பெடரேஷன் மையக்குழு உறுப்பினரும், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவருமான சக்திவேல், பிரீமியர் விஷன் பேஷன் பிரிவு தலைமை செயல் 1 அதிகாரி புளோரன்ஸ் ரூசன் ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தம் இறுதியானது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஜவுளி அமைச்சக செயலாளர் நீலம் ஷமி ராவ், கைத்தறித்துறை மேம்பாட்டு ஆணையாளர் பீனா, மூத்த தொழில்துறை தலைவர்கள், வடிவமைப்பாளர்கள், ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஒப்பந்தத்தை ஏ.இ.பி.சி. வரவேற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலமாக ஆயத்த ஆடை கொள்முதல், வடிவமைப்பு, நிலைத்தன்மை, ஜவுளி பாரம்பரியம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலமாக இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், வடிவமைப்பாளர்கள், கைவினைஞர்கள் முன்னணி பேஷன் நிறுவனங்கள் மற்றும் பிரீமியம் கொள்முதல் வலையமைப்புகளுடன் இணைவதற்கான வாய்ப்பை பெற முடியும்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் முக்கியத்துவதை இந்த ஒப்பந்தம் பெற்றுக்கொடுக்கும். ஐரோப்பிய சந்தையில் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகும் என்று ஏ.இ.பி.சி. தெரிவித்துள்ளது.