புதுடெல்லி,
டெல்லியில் இன்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ஜப்பான் பாதுகாப்புத்துறை மந்திரி ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, இந்தியா-ஜப்பான் இடையிலான கடல்வழி, வான்வழிப் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கு தடையாக இருக்கும் நடவடிக்கைகளுக்கு இருதரப்பினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இது சீன கடற்படையின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாடாக பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இந்தியாவும், ஜப்பானும் தங்கள் கடல்சார் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அத்துடன், சுதந்திரமான மற்றும் திறந்தவெளி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கில் ராணுவ ஒத்துழைப்பை ஒருங்கிணைக்க இருநாடுகளும் உறுதியளித்தன. இந்த பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ ஆதிக்க நடவடிக்கைகள் அதிகரித்து வரும் சூழலில் இத்தகைய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.