தமிழக செய்திகள்

சென்னையில் இந்தியா - மியான்மர் கூட்டு பேரிடர் மீட்புப் பயிற்சி நிறைவு

இந்தக் கூட்டுப் பயிற்சி, இரு நாடுகளின் கூட்டுத் தயார்நிலையையும், இணைந்து செயல்படும் திறனையும் வலுப்படுத்தியது.

சென்னை,

சென்னையில் இந்தியா மற்றும் மியான்மர் ராணுவத்தினர் பங்கேற்ற இரண்டு நாள் கூட்டு பேரிடர் மீட்புப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

பேரிடர் மீட்பு பயிற்சி

இது தொடர்பாக, இந்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னையில் நடைபெற்ற இந்தியா-மியான்மர் இடையிலான கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பயிற்சியான 'ராஹத் மித்ரா' (Rahat Mitra) வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்த இரு நாள் கூட்டுப் பயிற்சி 2026 நவம்பர் 4 முதல் 5 வரை நடைபெற்றது.

இப்பயிற்சியின்போது, ​​இந்திய ராணுவம் தனது மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) திறன்களை வெளிப்படுத்தியது. இந்தியக் கடற்படை மற்றும் இந்திய விமானப்படையுடன் இணைந்து செயல்பட்ட ராணுவத்தினர், வெள்ள நிவாரணப் பிரிவுகள் மற்றும் பொறியாளர் பணிக்குழுக்களின் (Engineer Task Forces) திறன்களைச் செயல்விளக்கங்கள் மூலம் வெளிப்படுத்தினர். இதில் மீட்புப் பணிகள், தேங்கிய நீரை வெளியேற்றுதல் மற்றும் போக்குவரத்துத் தொடர்பை மீட்டெடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவும் தற்காலிகப் பாலங்களை அமைத்தல் போன்ற செயல்பாடுகள் இடம்பெற்றன.

கூட்டுப் பயிற்சி

இருநாட்டு பங்கேற்பாளர்களும் தங்களுக்கிடையிலான தொழில்முறை கலந்துரையாடல்கள் மற்றும் செயல்பாட்டு அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டனர். அவர்கள், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும், மீட்பு நடைமுறைகளை மேம்படுத்தவும், புரிதலை வளர்த்துக்கொள்ளவும் இக்கூட்டுப்பயிற்சி உதவியது. இந்தக் கூட்டுப் பயிற்சி, இரு நாடுகளின் கூட்டுத் தயார்நிலையையும், இணைந்து செயல்படும் திறனையும் வலுப்படுத்தியது.

'தன்னலத்திற்கு முன்னதாக சேவை' (Service Before Self) என்ற கொள்கையின் அடிப்படையில், உயிர்களைக் காப்பதிலும், துயரங்களைக் குறைப்பதிலும், எல்லைகளைக் கடந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் இந்திய ராணுவம் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT