சென்னை,
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 41-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்கின. தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியை, பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் பேசிய அவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்க வந்துள்ள தடகள வீரர்களை வரவேற்றார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா முதல் 5 இடங்களுக்குள் வர வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும் என்றும், அதில் தமிழ்நாடு அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மீனவர் மற்றும் பழங்குடியினப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு எளிய பின்னணிகளில் இருந்து வீரர்கள் வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன என்றும், வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சர்வதேசத் தரத்தில் போட்டிகளை நடத்துவதே அரசின் நோக்கம் என்று தெரிவித்த அமைச்சர், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் இருப்பதைப் போன்ற சிறந்த விளையாட்டு அரங்கத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் விரைவில் ஆசிய அளவிலான பெரிய தடகளப் போட்டியை நடத்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 1994–95-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தெற்காசிய தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் பெரிய அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஒலிம்பிக் கனவை நனவாக்கும் இலக்குடன், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் தடகள வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டிகள் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.