தமிழக செய்திகள்

அமைச்சரவையில் இடம் பிடிக்க இந்திய கம்யூனிஸ்டு முயற்சிக்கவில்லை: மு.வீரபாண்டியன்

குதிரை பேரங்களில் எங்கள் கட்சிக்கு அனுபவமும் இல்லை என்று மு.வீரபாண்டியன் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையிலும், அரசியல் சூழ்நிலையை கருதியும், ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் குறுக்கீடுகள் இல்லாத வகையிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி புதிய அரசுக்கு ஆதரவு அளித்ததற்கு கட்சியின் தமிழ் மாநில குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி தோல்வி அடைந்திருந்தாலும் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நலத்திட்டங்கள் தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டன. அத்தகைய நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் புதிய திட்டங்களையும் வரவேற்போம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி அமைச்சரவையில் இடம்பெறும் என்ற கொள்கை திட்டமும் இல்லை. அது போன்ற ஒரு முயற்சியும் இல்லை. விவசாயிகள், கூலி தொழிலாளர்களின் நலன் மட்டுமே எங்க ளுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. அத்தகைய நிலை வரும் போதும் கம்யூனிஸ்டு கட்சியும் தங்களுடைய நிலையை உயர்த்தி கொள்ளும் போதும் அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து சிந்திப்போம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் ஒரே புள்ளியில் இருந்து ஆதரிக்கி றோம். அது நல்லாட்சி தர வேண்டும் என்பது தான். குதிரை பேரம் பற்றி அறியாதவர்கள் கம்யூனிஸ்டுகள். எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர்கள் கூறியிருந்தாலும் அத்தகைய சிந்தனையில் எங்கள் கட்சி ஈடுபடாது.

இது போன்ற பேரங்களில் எங்கள் கட்சிக்கு அனுபவமும் இல்லை. ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் வாழ்வாதாரம் மட்டுமே எங்களுடைய சிந்தனையாக உள்ளது. குதிரை பேரம் தொடர்பாக வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டால் சட்டம் தனது கடமையை செய்யட்டும். இவ்வாறு அவர் கூறினார்.