தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு பயின்று வந்த ஒரு மாணவி, நேற்று முன்தினம் மாலை மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கும், பெண்களின் பாதுகாப்பிற்கும் விடப்பட்ட பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாடசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தொடரும் இதுபோன்ற கொடூரச் செயல்கள் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை மாவட்டக் காவல்துறை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.
அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்டக் குழு சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.