சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே, சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான அந்த குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, திமுக அமைத்துள்ள கூட்டணி கட்சிகளுடான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்குழு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயுஎம்எல்) கடந்த 22ம் தேதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டவில்லை. இதையடுத்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயுஎம்எல்) கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் , அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். ஒதுக்கப்பட்ட 2 எந்த தொகுதிகள் எவை என்பது குறித்த அறிவிப்பை திமுக வெளியிடும் என்றும் காதர் மொகிதீன் கூறினார்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.