புதுடெல்லி,
இந்தியாவின் தனியார் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, பல்வேறு நாடுகளுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. தற்போது அந்த நிறுவனம் விமான சேவை வலையமைப்பை சீரமைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக 6 சர்வதேச நகரங்களுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக நேற்று அறிவித்து உள்ளது.
ஜூலை 1-ந் தேதி முதல் லங்காவி (மலேசியா), கிராபி (தாய்லாந்து), ஹோ சி மின் (வியட்நாம்) ஹாங்காங் மற்றும் ஷாங்காய் (சீனா), மேலும் ஜூலை 3 முதல் செம் ரியப் (கம்போடியா) ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகள் செப்டம்பர் 30-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
வரவிருக்கும் காலாண்டில் வழக்கமாகவே விமானப் பயணத்திற்கான தேவை குறைவாக இருக்கும் என்பதையும், தற்போது நிலவும் மிகவும் நெருக்கடியான சூழலையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. சூழல் மேம்படுவதைப் பொறுத்து, பாதிக்கப்பட்ட அனைத்து சேவைகளும் அக்டோபர் 1-ந்தேதி முதல் முன்பதிவுகளை மீண்டும் தொடங்கும் என்றும் கூறி உள்ளது.