சென்னை,
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். அத்துடன் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாக கூறி திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”பரந்தூர் விமான நிலையம் குறித்து 55 விதியிண் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தோம். கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று ஏற்கபப்டும் என கூறி இருந்தனர். முதல்-அமைச்சர்110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்தால் பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சென்னையில் 2-வது விமான நிலையம் தேவை. பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியமானது. விமான நிலையம் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது. சென்னையை சுற்றி மற்ற இடங்களில் விமான நிலையம் அமைவதில் சிக்கல்கள் உள்ளன. பல இடங்களில் ஆய்வு செய்த பின்னர்தான் பரந்தூரை விமான நிலையத்துக்காக தேர்வு செய்தோம்.
ஸ்ரீபெரும்புதூரில் அதிகளவில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் பரந்தூர் விமான நிலையம் கட்டாய தேவையாக உள்ளது. பரந்தூர் விமான நிலையத்தை நம்பியே எலக்ட்ரானிக் நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வந்தன. பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டால் எத்தகைய பொருளாதாரா விளைவு ஏற்படும் என்பது குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். அரசியல் நோக்கம் தாண்டி செயல்படுவது அவசியம்.”
இவ்வாறு அவர் பேசினார்.