கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சேலம்,

மேட்டூர் அணைக்கு காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12,350 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தண்ணீர் திறப்பு

காவிரி மேலாண்மை வாரியம் கடந்த 15-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்க ளுக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தர விட்டுள்ளது. இந்த நிலையில் கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 298 கன அடி தண்ணீரும் என மொத்தமாக 12 ஆயிரத்து 298 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காவிரி ஆறு

இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி 12 ஆயிரத்து 500 கன அடியானது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

மேலும், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிப்பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

3-வது நாளாக தடை

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக -கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 3-வது நாளாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (ஆக.18) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை

இதற்கிடையே மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 15-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 4,385 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்றுமுன்தினம் வினாடிக்கு 6,179 கன அடியாக அதிகரித்தது. இந்தநிலையில், நேற்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 8 ஆயிரத்து 555 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.13 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு இன்று (செவ்வாய் கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12,350 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. குடிநீருக்காக 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நீர் இருப்பு 44.701 டிஎம்சியாக உள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.