தமிழக செய்திகள்

இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை ஆட்டோவில் கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது

அம்பத்தூரில் கணவர் வேலைக்குச் சென்ற பிறகு மனைவி தினந்தோறும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் நேரத்தை செலவிட்டதன் மூலம் அவருக்கு பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

சென்னை,

சென்னை அம்பத்தூரில் இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர்களுடன் பழகியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை ஏமாற்றி அழைத்து, ஆட்டோவில் வைத்து கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளம்பெண் கொலை

சென்னை அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென ஆட்டோவில் இருந்து பெண் ஒருவர் உடல் முழுவதும் வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வெளியே தூக்கி வீசப்பட்டார். பின்னர் அத்த ஆட்டோ அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் அந்த பெண் இறந்தார். அவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சடையாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஆட்டோ டிரைவர்

இதில் அம்பத்தூரைச் சேர்ந்த வைதேகி என்பவரை நடத்தை சந்தேகத்தில் கணவரே ஓடும் ஆட்டோவில் கழுத்தை அறுத்து கொன்று இருப்பது தெரிந்தது. இச்சம்பவம் குறித்த விபரம் பின்வருமாறு:

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திராநகரை சேர்ந்த சின்னா, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வைதேகி (வயது 24). இவரும் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இன்ஸ்டாகிராம் மோகத்தால் பிரச்சினை

சின்னா வேலைக்குச் சென்ற பிறகு வைதேகி தினந்தோறும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் நேரத்தை செலவிட்டார். இதில் பல ஆண் நண்பர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் நாள் முழுவதும் வைதேகி இன்ஸ்டாகிராமிலும், செல்போனில் ஆண் நண்பர்களுடன் பேசுவதிலும் மூழ்கினார். இதனை அறிந்த சின்னா மனைவி வைதேகியை பலமுறை கண்டித்தார். எனினும் வைதேகியின் இன்ஸ்டாகிராம் மோகம் குறையவில்லை. அப்படியே நீடித்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட மோதலினால் கோபம் அடைந்த வைதேகி திருமுல்லைவாயிலில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கினார். அங்கேயும் இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பர் ஒருவருடன் வைதேகி தொடர்ந்து பழக்கத்தில் இருந்தது சின்னாவிற்கு தெரியவந்தது.

சமாதான பேச்சு

இதையடுத்து நேற்று மாலை சின்னா, மனைவி வைதேகியிடம் செல்போனில் பேசினார். அப்போது "நாம் இருவரும் மீண்டும் ஒன்றாக குடும்பம் நடத்தலாம். நமக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். இது தொடர்பாக நாம் பேசி தீர்த்து கொள்ளலாம்" என்று கூறி அம்பத்தூர் இந்திரா நகரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்தார்.

கொலை திட்டம்

கணவர் அழைத்ததால் வைதேகி தனக்கு நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் வீட்டுக்கு வந்தார். இருவரும் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வைதேகி இன்ஸ்டாகிராம் பழக்கத்தை கைவிடுவதாக கூறவில்லை என்று தெரிகிறது. எனினும் சமாதானம் அடைந்ததாக சின்னா நாடகமாடினார். மேலும் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். இதைத் தொடர்ந்து வைதேகியிடம் "நீ தான் நன்றாக ஆட்டோ ஓட்டுவாயே... நீ ஆட்டோ ஓட்டு, நான் பின்னால் அமர்ந்து சவாரி செய்கிறேன். எனக்கு ஆசையாக உள்ளது" என்று சின்னா கூறினார்.

மனைவி கழுத்தை அறுத்து கொலை

இதை நம்பிய வைதேகி ஆட்டோ ஓட்ட, சின்னா பின்னால் அமர்ந்து கொண்டார். அவர்கள் அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றபோது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வைதேகியின் கழுத்தை கொடூரமாக கொலை வெறியுடன் அறுத்தார். மேலும் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் வைதேகி அலறியபடி ஆட்டோவை நிறுத்தினார். சிறிது நேரத்தில் வைதேகி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே வைதேகியின் உடலை சாலையோரம் வீசிவிட்டு அதே ஆட்டோவில் சின்னா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் உள்ள ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி சின்னாவை தேடி வந்தனர். அப்போது மனைவியை கொலை செய்த சின்னா எந்தவித பதட்டமும் இல்லாமல் அம்பத்தூர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள காமராஜர்புரத்தில் தனது நண்பர்களுடன் மது குடித்துக்கொண்டு இருந்தது தெரிந்தது.

கணவர் கைது

நள்ளிரவு 12 மணியளவில் போலீசார் விரைந்து சென்று சின்னாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் நண்பர்கள் யார்?

மேலும் கொலை செய்யப்பட்ட வைதேகியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தினையும் ஆய்வு செய்து அவருடன் நெருங்கி பழகிய ஆண் நண்பர்கள் யார்? யார்? என்ற விபரங்களையும் சேகரித்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர்களுடன் பழகியதால் மனைவியை ஏமாற்றி அழைத்து, ஆட்டோவில் வைத்து கொடூரமாக கணவர் கொலை செய்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.