சென்னை,
மூளைச்சாவு குறித்து அறிவிப்பதற்கான நடைமுறையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
விபத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் மூளைச்சாவு ஏற்படுவது என்பது மூளையின் அனைத்து செயல்பாடுகளும் நிரந்தரமாக நிறுத்தப்படும் நிலையாகும். இதனை உரிய மருத்துவ நடைமுறைகளின்படி உறுதி செய்து, அறிவிப்பது அவசியம் ஆகும். மூளைச்சாவு உறுதி செய்யப்பட்ட பின்னர், அந்த நபரின் குடும்பத்தினர் சம்மதத்துடன் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்பட பல்வேறு உறுப்புகள் தேவையான நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் பலரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகிறது. மூளைச்சாவு அறிவிப்பில் ஒரே மாதிரியான நடைமுறையை நாடு முழுவதும் பின்பற்றுவதன் மூலம் உறுப்பு தானத்தை மேலும் அதிகரிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
இதன் தொடர்ச்சியாக, மூளைச்சாவு குறித்து அறிவிப்பதற்கான நடைமுறையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மூளைச்சாவு சான்றிதழ் வழங்குதல், உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றில் வெளிப்படையான நடைமுறையை உறுதி செய்யும் வகையில் இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மூளைச்சாவு அறிவிப்புக்கான மருத்துவ பரிசோதனைகளில், குறிப்பிட்ட கால இடைவெளியில் 2 முறை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு 6 மணி நேர இடைவெளியில் இந்த பரிசோதனைகள் நடத்தப்படவேண்டும் என்று வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அறிவிப்பில் ஒரே மாதிரியான நடைமுறை இருந்தால், உடல் உறுப்பு தானம் குறித்த பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்று சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு தெரிவித்துள்ளது.