தமிழக செய்திகள்

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் இன்சுலின்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு

3594 மருத்துவ பணியாளர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என சட்டசபையில் அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

சென்னை,

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ரூ.9.94 கோடியில் ஆண்டு முழுவதும் இன்சுலின் மருந்துகள் வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

தமிழக சட்டசபையில், சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின் மீது அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்தார்.

அப்போது,"திமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தாலும் லஞ்சத்தை எதார்த்தமாக மாற்றி விட்டார்கள். அதுதான் பிரச்சினை" என்றார்.

கடந்த ஆட்சியாளர்கள் ஊழலை அன்றாட வாழ்வின் எதார்த்தமாக பார்த்ததாக அமைச்சர் அருண்ராஜ் பேசியதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

ஊழலை எதார்த்தமாக பார்த்த கடந்த ஆட்சியாளர்கள் என அமைச்சர் அருண்ராஜ் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, எந்த கட்சி என்றே அமைச்சர் அருண்ராஜ் குறிப்பிடவில்லை, ஊழல் என்றால் திமுகவினர் கத்துவது ஏன் என அமைச்சர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில்,

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் 16.5 இலட்சம் வளரிளம் பருவ மாணவ-மாணவிகளுக்கு, ரூ.6.37 கோடியில் இரத்த சோகையைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் இரும்பு கண்மணி திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக, அரசு மருத்துவமனைகளில், Type-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ரூ.9.94 கோடியில் ஆண்டு முழுவதும் இன்சுலின் மருந்துகள் வழங்கப்படும்.

நவீன, விரிவான மற்றும் எதிர்கால நோக்குடைய புதிய தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் இயற்றப்படும்

சமூகம், குடும்பம் மற்றும் தனிமனித அளவில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தும் வகையில் புதிய positive health policy உருவாக்கப்படும்

தமிழ்நாட்டில் முதன் முறையாக 70 வயதிற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு வருமான உச்ச வரம்பு இன்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்

3594 மருத்துவ பணியாளர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 1695 தொகுப்பூதிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீடு மற்றும் மருத்துவமனை அல்லாத இடங்களில் சுயமாக பிரசவம் செய்வதை சட்டப்படி குற்றம் என்பதைச் சேர்த்து புதிய |பொது சுகாதார சட்டம் கொண்டு வரப்படும். முதலமைச்சரின் முதியோர் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் எனவும் மருத்துவத்துறை மானியக் கோரிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.