கோவை,
இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் இன்சுலின் தட்டுப்பாடால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
கோவையில் சிங்காநல்லூர், கணபதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது மாதச் சம்பளத்தில் சந்தா செலுத்தி இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு கடந்த சில நாட்களாக சர்க்கரை நோயாளிகளுக்கான நவீன இன்சுலின் பேனாக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் பழைய ஊசி முறைக்கு தள்ளப்படும் நிலை இருப்பதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது.
இது குறித்து கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது. எங்களுக்கு மருந்துகள் வாங்கும் அதிகாரம் கிடையாது. சப்ளை செய்யப்படும் மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குகிறோம். மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படும் போது, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதை பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். மேலும் உடல் வலியை போக்கும் வலி நிவாரண மருந்துகளும் கிடைப்பதில்லை என்று நோயாளிகள் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினையில் தமிழக அரசு மற்றும் தொழிலாளர் நல காப்பீட்டுக் கழக நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நவீன இன்சுலின் தடையின்றி கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.