தமிழக செய்திகள்

'ஊடகங்களை அவமதிப்பது குடிமக்களை அவமதிப்பதற்கு சமம்' - நடிகர் பிரகாஷ் ராஜ்

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர் என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

செய்தியாளர் சந்திப்புகளை தவிர்க்கும் அரசியல் தலைவர்கள் மீது நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களை தவிர்ப்பது என்பது குடிமக்களை அவமதிப்பதற்கு சமம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நான் மக்கள் நலன் சார்ந்த அரசியலில் உறுதியாக இருக்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சியை நடத்துகிறார்கள். அதேசமயம், ​​குடிமக்களும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் செய்தியாளர் சந்திக்க மறுப்பது ஏன்? ஏன் பத்திரிகைகளை அவமதித்து இழிவுபடுத்த வேண்டும்? முதல்-அமைச்சர் அல்லது பிரதமர் என யாராக இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பொதுமக்களின் சார்பாக ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை பிரகாஷ் ராஜ் முன்வைத்தார். தேர்வுக் குழுவில் இந்திய தலைமை நீதிபதிக்கு பதிலாக ஒரு மத்திய மந்திரியை நியமித்தது, ஆளும் கட்சிக்கு நியாயமற்ற 2:1 பெரும்பான்மையை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் நியமன முறை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அதோடு, எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டிய பிரகாஷ் ராஜ், குடிமக்கள் பணியிடத்திலோ, மருத்துவமனைகளிலோ அல்லது வீட்டை விட்டு வெளியிலோ இருந்த ஒரே காரணத்திற்காக, "வரவில்லை" அல்லது "இடம் பெயர்ந்தார்" என்ற முத்திரைகளின் கீழ் தன்னிச்சையாக வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT