சென்னை,
ஒருங்கிணைந்த நிலப்பறவைகள் கணக்கெடுப்பு 2026, நாளை மற்றும் நாளை மறுநாள் (14 மற்றும் 15-ந்தேதி) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள் தங்களது பெயர்களைச் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
உள்நாட்டுப் பறவைகள் மற்றும் வலசை வரும் பறவைகள் என இரண்டிற்கும் தமிழ்நாடு ஒரு முக்கியமான பல்லுயிர் மையமாக இருப்பதால் தமிழ்நாட்டில் பறவைகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்பது மிக முக்கியமான பணியாக உள்ளது.
தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இருவாட்சிப் பறவைகள் (Hornbill) பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், உயர்நிலை வனஉயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (AIWC) உள்ள வேட்டையாடும் பறவைகள் (Raptor) ஆராய்ச்சி நிறுவனம், சர்வதேச பறவைகள் பாதுகாப்பு மையம், மரக்காணம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பறவைகளின் எண்ணிக்கை மற்றும் இனப்பல்வகைமையை கண்காணிப்பதற்காக மாநில அளவிலான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
2025-ம் ஆண்டில், மார்ச் 15 மற்றும் 16 (2025) ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 1,093 நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வலசை வரும் பறவைகள் மற்றும் உள்நாட்டுப் பறவைகள் என மொத்தம் 401 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. மொத்தமாக 2.3 லட்சம் பறவைகள் கணக்கிடப்பட்டன.
தமிழ்நாட்டில் நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு 2026 பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வலசை வரும் காலத்தின் ஆரம்பப் பகுதியில் உள்ள தரவு இடைவெளிகளை (data gaps) நிரப்பும் நோக்கில் இந்த காலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வனக் கோட்டத்திலும் (Forest Division) குறைந்தபட்சம் 25 இடங்களிலுள்ள நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு 2 கிலோமீட்டர் நீளமுடைய கோடு வழித்தட (Line Transect) முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும். பல்வேறு வாழ்விடங்களில் பறவை இனங்களின் விரிவான ஆவணங்களை உறுதி செய்வதற்காக நேரடி எண்ணிக்கை மற்றும் ஒலியியல் கணக்கெடுப்பு முறைகள் இரண்டும் பயன்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் நீண்டகால கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டமிடலை ஆதரிக்க வலுவான அறிவியல் தரவை உருவாக்குவதே ஒத்திசைக்கப்பட்ட பயிற்சியின் நோக்கமாகும்.
இந்த மாநில அளவிலான பறவைகள் கணக்கெடுப்பில் அனுபவம் வாய்ந்த பறவையியல் பார்வையாளர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள். இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள், கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே தங்களது பெயர்களைச் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பதிவு செய்வதற்கும் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்கும், கீழே வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டைப் (QR code) பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.