சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களில் உள்ள பகுதிகளில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 14.09.2026 முதல் 19.09.2026 வரை 11,02,385 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 4,192 வீடுகளில் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவை அழிக்கப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அலுவலர்கள் மற்றும் களப் பணியாளர்களால் வீடுவீடாகச் சென்று டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தண்டையார்பேட்டை மண்டலம், எருக்கஞ்சேரி பிரதான சாலை அருகிலுள்ள பாரதியார் தெரு மற்றும் சுந்தரர் தெருவில் உள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., இன்று (21.09.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மண்டல நல அலுவலர்கள் மற்றும் டெங்கு தடுப்பு களப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
பின்னர், மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசுப்புழு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:-
“பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (UPHC), 16 நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையங்கள் (UCHC) மற்றும் 200 நகர்ப்புற சுகாதார நல மையங்கள் (HWC), தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை, 3 மகப்பேறு மருத்துவமனைகள், 10 டயாலிசிஸ் மையங்கள் ஆகியவற்றில் உள்ள மருத்துவ அலுவலர்களுக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ மையங்களிலும் காய்ச்சலுக்கான மருந்துப் பொருட்களும் கையிருப்பில் உள்ளது.
1 முதல் 15 மண்டலங்களிலும் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்புப் பணியில் 15 மண்டல நல அலுவலர்கள், 15 பூச்சியலாளர்கள், 44 சுகாதார அலுவலர்கள், 200 சுகாதார ஆய்வாளர்கள், 35 கள உதவியாளர்கள், 44 அடிப்படை சுகாதாரப் பணியாளர்கள் (Domestic Breeding), 3,697 களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு களப் பணியாளரும் தினமும் 80 முதல் 100 வீடுகளைப் பார்வையிடுகின்றனர். மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பயிற்சிகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநகராட்சிப் பகுதிகளில் வார்டு வாரியாக அனைத்து இடங்களிலும் காலியாக உள்ள நிலங்கள், வணிக வளாகங்கள், புதிய கட்டுமான இடங்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், மருத்துவமனைகள், அரசு கட்டடங்கள், வீட்டிற்குள்ளும் மற்றும் சுற்றப்புறப் பகுதிகளிலும் கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள இடங்களான தேங்காய் மட்டை, ஓடுகள், கண்ணாடிப் பொருட்கள், டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை களப் பணியாளர்கள் கண்டறிந்து அவற்றை அழித்து வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி, தங்கள் பகுதிகளில் காய்ச்சல் பாதித்த நபர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்தும் வருகின்றனர்.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆய்வகங்கள், பயிற்சி மையங்கள், வீடுகள் மற்றும் அரசு மையங்களில் இருந்து புகாரளிக்கப்பட்ட காய்ச்சல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு காய்ச்சல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பிய அனைத்து காய்ச்சல் நோயாளிகளும் 3 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர்.
தண்ணீர் தொட்டிகள் மற்றும் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் ஆகியவற்றில் அபேட் (Abate) எனும் கொசுப்புழு நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது. மேலும், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொசு லார்வாக்களை அழிக்கும் (MLO) எண்ணெய் பயன்படுத்தி கொசுப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. வளர்ந்த கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தெரு வாரியாக வீட்டிற்குள்ளும், வெளியிலும் புகைப்பரப்பும் பணியும் (Fogging) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
14.09.2026 முதல் 19.09.2026 வரை 11,02,385 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 4,192 வீடுகளில் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவை அழிக்கப்பட்டது. மேலும், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள், அரசு கட்டடங்கள், காலி இடங்கள்,
வணிக வளாகங்கள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் அழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொசு ஒழிப்புப் பணிகளுக்காக கொசுக்கொல்லி மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. இதற்காக 521 அழுத்தத் தெளிப்பான்கள், 49 பவர் ஸ்பேரயர்கள், 132 பேட்டரி ஸ்பேரயர்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 15 மருந்துத் தெளிப்பான்கள், கையினால் இயக்கப்படும் 272 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 200 மினி புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 92 புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.