தமிழக செய்திகள்

சென்னையில் அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்ற 2 நாட்கள் தீவிர நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னையை அழகுபடுத்தும் முயற்சிக்கு பொதுமக்களும் அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை,

சென்னையில் அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்ற 2 நாட்கள் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

விளம்பர பலகைகள் அகற்றம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து சாலைகள் மற்றும் பொது இடங்களில் முறையான உரிமம் இன்றி அமைக்கப்பட்ட விளம்பர பலகைகள், அனுமதிக்கப்பட்ட அளவீடுகளுக்கு மாறாக உள்ளவை மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளுக்குட்பட்டு அமைக்கப்படாத விளம்பர பலகைகளை கண்டறிந்து அகற்றும் பணி 24.11.2026 மற்றும் 25.11.2026 ஆகிய இரண்டு நாட்களுக்கு தீவிர பணியாக மேற்கொள்ளப்படவுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன், தகவல்.

அகற்றும் பணி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும், அனுமதியற்ற விளம்பர பலகைகளை கண்டறிந்து அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உரிய உரிமம்

இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் அனைத்து சாலைகள் மற்றும் பொது இடங்களில் முறையான உரிமம் இன்றி அமைக்கப்பட்ட விளம்பர பலகைகள், அனுமதிக்கப்பட்ட அளவீடுகளுக்கு மாறாக உள்ளவை மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளுக்குட்பட்டு அமைக்கப்படாத விளம்பர பலகைகளை கண்டறிந்து அகற்றும் பணி 24.11.2026 மற்றும் 25.11.2026 ஆகிய இரண்டு நாட்களுக்கு தீவிர பணியாக காலை 7 மணி முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்பணிகளில் வார்டு வாரியாகவும், மண்டல அளவிலும், வட்டார அளவிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகளை கண்காணிக்க பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. விளம்பரதாரர்கள், விளம்பர முகமைகள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர், மாநகராட்சியிடமிருந்து உரிய உரிமம் பெற்ற பின்னரே, நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு விளம்பர பலகைகளை அமைக்க வேண்டும். உரிமத்திற்காக விண்ணப்பம் மட்டும் சமர்ப்பிக்கப்பட்டு, இன்னும் உரிமம் வழங்கப்படாத விளம்பர பலகைகளும் அனுமதியற்றவையாகவே கருதப்பட்டு அவை அகற்றப்படும்.

எனவே, சம்பந்தப்பட்ட அனைவரும் தங்கள் விளம்பர பலகைகளுக்கான உரிமங்களின் செல்லுபடியாகும் தன்மையை சரிபார்த்து, அவை உரிய விதிகளுக்கு உட்பட்டு இருப்பதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மாநகராட்சியின் சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க, விளம்பரதாரர்களும், முகமைகளும் அனுமதியற்ற விளம்பரப் பலகைகளைத் தாமாகவே முன்வந்து அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முழு ஒத்துழைப்பு

அனுமதியற்ற விளம்பரங்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சென்னையின் அழகை பேணவும் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிக்கு, பொதுமக்களும் அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT