சென்னை,
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் பணி மற்றும் கொசு மருந்து தெளித்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் பயன்படுத்தப்படாத பொருட்களில் மழைநீர் தேங்கி அவற்றில் உற்பத்தியாவதற்கு வாய்ப்புள்ளது. ஏடிஸ் வகை கொசுக்கள் பகல் நேரங்களில் மனிதர்களை கடிக்கும் தன்மை கொண்டவை என்பதால், டெங்கு பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள பள்ளிகள், வீடுகள், தெருக்கள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட இடங்களில் கொசு உற்பத்தியாகும் இடங்களை களப்பணியாளர்கள் கண்டறிந்து அகற்றுதல், கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் மற்றும் கொசு ஒழிப்பு புகைப்புரப்பும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மாநகராட்சி பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை அழிக்கும் வகையில் வீடுகள் தோறும் களப்பணியாளர்கள் மூலம் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள தேங்காய் ஓடு, கண்ணாடிப் பொருட்கள், டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்றுதல், வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றில் கொசுப்புழு உருவாகியுள்ளதா என கண்டறிந்து கொசுக்கொல்லி மருந்து தெளித்தல்.
வீடுகள்தோறும் காய்ச்சல் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்து, அவ்விவரங்களை பதிவு செய்தல், அவ்விடத்தில் தீவிர தூய்மை பணி மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் கொசுக்கொல்லி மருந்து தெளித்தல், தெருக்கள் மற்றும் வீடுகளில் கொசு ஒழிப்பு புகைமருந்து அடித்தல், உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் மொத்தம் 3,703 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பணியாளரும் நாளொன்றுக்கு 80 முதல் 100 வீடுகளை களஆய்வு மேற்கொள்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5க்குட்பட்ட பகுதி, வார்டு-11க்குட்பட்ட பகுதி, வார்டு-12க்குட்பட்ட எழுத்துக்காரன் தெரு, மாதவரம் மண்டலம், வார்டு-23க்குட்பட்ட குரு சாந்தி நகர், வார்டு-29க்குட்பட்ட ஶ்ரீ ராமன் சாலை, வார்டு-33க்குட்பட்ட கலைமகள் நகர், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-36க்குட்பட்ட பகுதி,வார்டு-40க்குட்பட்ட ஜீவா நகர், 4ஆவது தெரு, அம்பத்தூர் மண்டலம், வார்டு-83க்குட்பட்ட வனசக்தி நகர், வார்டு-91க்குட்பட்ட முகப்பேர், 2ஆவது பிரதான சாலை, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-121க்குட்பட்ட பி.பி சாலை, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-132க்குட்பட்ட பகுதி, வார்டு-136க்குட்பட்ட விஜயராகவபுரம், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-153க்குட்பட்ட விக்னேஷ்வரா நகர், வி.ஒ.சி தெரு, ஆலந்தூர் மண்டலம், வார்டு-165க்குட்பட்ட சரஸ்வதி நகர், 1ஆவது பிரதான சாலை, அடையாறு மண்டலம், வார்டு-168க்குட்பட்ட ஈ.சி.ஐ பள்ளி வளாகம், வார்டு-182க்குட்பட்ட செந்தில் நகர், பெருங்குடி மண்டலம், வார்டு-185க்குட்பட்ட வி.ஜி.பி லேயவுட், 2ஆவது குறுக்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கொசு ஒழிப்பு புகை பரப்பும் பணி மற்றும் மழைநீர் வடிகாலில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.