சென்னை,
சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தேங்கிய குப்பைக் கழிவுகளை அகற்றுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட சுகாதாரப் பணிகளில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இன்று (19.9.2026) கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர சுகாதாரப் பணிகளையும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தேங்கிய குப்பைக் கழிவுகளை அகற்றுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகளில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளை மாநகராட்சி கமிஷனர் சமீரன் ஆய்வு செய்து, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தோட்டக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்திடவும், கொசுப்புழுக்கள் உருவாவதைத் தடுக்கும் விதத்தில் தண்ணீர் தேங்காமல் அகற்றிடவும், கொசு ஒழிப்பு புகை பரப்பும் பணியினை மேற்கொள்ளவும், மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சிகிச்சைகளை சிறப்பாக வழங்கிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சென்னையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இதுபோன்ற சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அலுவலர்கள் தொடர் ஆய்வு மேற்கொண்டு இந்த நடவடிக்கைகளை கண்காணித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமரேசன், மாநகர நல அலுவலர் டாக்டர் ஜெகதீசன், இணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் செந்தில்குமார், தலைமை பூச்சி தடுப்பு அலுவலர் டாக்டர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.