சென்னை,
சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ்வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், அனைத்து காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 9.11.2026 அன்று தீவிர விசாரணை, சோதனைகள் மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 185 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 222 நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து 2வது நாளாக மேற்கொள்ளப்பட்ட ரௌடி வேட்டையில், 10.11.2026 அன்று சென்னை பெருநகர காவல் நிலையங்களில் குற்றப்பின்னணி மற்றும் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் 631 ரவுடிகள் உட்பட 769 நபர்களை பிடித்து விசாரணை செய்து, 49 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 147 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் இனி குற்றச் செயலில் ஈடுபடக்கூடாது என்பதற்கான நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 572 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 612 நபர்களின் இனிக் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு, காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
மேலும், சென்னை பெருநகர காவல்துறையின் இந்த ரௌடிகள் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்பதால், சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.