தமிழக செய்திகள்

தங்கம் கடத்தலை தடுக்க சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

சென்னை விமான நிலையம் சுங்கத்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை,

தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் விமானங்களில் தங்கம் கடத்தல் அதிகரிக்க வாய்ப் புள்ளதாக கருதப்படுகிறது. தங்கம் கடத்தலை முறியடிக்க சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை மற்றும் நுண்ணறிவுப் பிரிவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக ஒரு ஷிப்ட்டிற்கு 20 அதிகாரிகள் இருக்கும் இடத்தில், தற்போது அதிகாரிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடத்தலில் பெண் பயணிகள் ஈடுபடுத்தப்படலாம் என்பதால், சோதனையிட பெண் அதிகாரிகளும் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் வருகை பகுதியில் தங்க கடத்தலை தடுக்கவும், புறப்பாடு பகுதியில் 'ஹவாலா' பண கடத்தலை தடுக்கவும் 24 மணி நேர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஹாங்காங் விமானங்களுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது. தங்கம் கடத்தலுக்கான பண பரிமாற்றம் ஹவாலா முறையில் நடைபெற வாய்ப்புள்ளதால், சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பய ணிகளின் உடைமைகளும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.

வரி உயர்வால் கடத்தல் கும்பல் அதிக அளவில் தங்கம் கடத்த வாய்ப்புள்ளதால் சென்னை விமான நிலையம் சுங்கத்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.