தமிழக செய்திகள்

பொறியியல், கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக்கடன்: அமைச்சர் அறிவிப்பு

தகுதியான மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் மாவட்ட அளவில் கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் வாயிலாக விரைவான சேவை வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது :-

பிணையில்லா கல்விக் கடன்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் 06.07.2026 அன்று நடைபெற்ற உயர்கல்வி துறை ஆய்வு கூட்டத்தில், பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல், கல்லூரிகளில் மாணாக்கர்கள் சேர்க்கையினை மேலும் அதிகரிப்பதற்கும், பொருளாதார காரணங்களால் எந்தவொரு மாணவரும் உயர்கல்வியை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படாத வகையில், தகுதியான மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒருங்கிணைப்பு அலுவலர்

அதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கல்விக்கடன் வழங்குவதை திறம்பட செயல்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உதவி பேராசிரியர் நிலையில் ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சேவைக்கென ஒவ்வொரு ஒருங்கினைப்பு அலுவலருக்கும் பிரத்தியேகமான தெலைப்பேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி

இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள், பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணாக்கர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் வழங்குவார்கள். ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு வங்கிக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி, முன்னணி வங்கிகளின் உயர் அலுவலர்கள் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு பாலம்

கல்விக் கடன் பெற விரும்பும் மாணாக்கர்கள் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டால் கல்வி கடன் குறித்த அனைத்து விவரங்களையும் மாணவர்களுக்கு வழங்குவதோடு, மாவட்ட முன்னணி வங்கி மேலாளர் தொடர்பு கொண்டு மாணாக்கர்களுக்கும், வங்கிக்கும் ஒரு இணைப்பு பாலமாக ஒருங்கிணைப்பு அலுவலர்கள் செயல்படுவர்.

கலெக்டர்

மேலும், ஏற்கனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டல் மற்றும் உதவி மையமாக செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பொறுப்பு அலுவலருடன் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர் இணைந்து செயல்படுவார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர் வாயிலாக பெறப்படுகின்ற கல்வி கடன் குறித்த தகவல்கள் மற்றும் வங்கி விவரங்கள் மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து தெரிவிக்கப்படும்.

ஆய்வுக் கூட்டம்

மாவட்ட கலெக்டர், அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்விக் கடன் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடன் அவ்வப்போது ஆய்வுக் கூட்டம் நடத்தி வங்கி வாரியாக மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் எளிதாகவும், விரைவாகவும் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார். மேலும், இந்த ஆய்வுக் கூட்டத்தில் கல்லூரி வாரியாகவும் வங்கிகள் வாரியாகவும் கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கை, வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள கடன்களின் விவரம் மற்றும் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களின் மீது உடனடியாக கல்விக்கடன் வழங்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொள்வார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான இந்த அரசின் முன்னெடுப்பின் மூலம், பொருளாதார காரணங்களால் உயர்கல்வி பாதிக்கப்படாமல், தகுதியான பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் எளிதில் கல்விக் கடன் பெற்று தங்களது கல்வியை தொடரும் வாய்ப்பு உறுதி செய்யப்படுவதுடன், உயர்கல்வி துறையில் மாணாக்கர் சேர்க்கையும் மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, கல்லூரிக் கல்வி ஆணையர் பி.பொன்னையா, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தின சாமி, ஆகியோர் உடனிருந்தனர்.