தமிழக செய்திகள்

இடைக்கால வேளாண் பட்ஜெட்- உழவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலுரை

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக 2021-2022 ஆம் ஆண்டில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையைக் கொண்டுவந்தார்கள் என்று எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை,

சட்டசபையில் வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இடைக்கால வேளாண் பட்ஜெட் உரைக்கு பதில் உரையாற்றியதாவது:-

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முத்தமிழால் பெற்றெடுத்து, செந்தமிழால் வளர்த்தெடுத்து, நற்றமிழால் வார்த்தெடுத்து முறை செய்து காப்பாற்றும் மன்னவன் என பெயரெடுத்து, காட்சிக்கு எளியவன், கடுஞ்சொல் அல்லன் என செயலெடுத்து நிறைசெய்து கோலோட்சும் திராவிடர் எங்கள் முதலமைச்சர் அவர்களுக்கு முதல் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி) ஏனென்றால், அவர் யாரையும் கடுமையாகப் பேசியது கிடையாது. எரிச்சலாகவும் பேசியது கிடையாது. அன்பாகப் பேசுகின்றவர், மதிக்கின்றவர். இப்போதுள்ள எதிர்க்கட்சிகளைப் பார்த்தால் எப்படி பேசுகிறார்கள், எப்படி கத்துகிறார்கள், எப்படி எரிச்சலாகப் பேசுகிறார்கள், அதற்கு உதாரணமாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நம்மை எல்லாம் வழி நடத்துகின்றார்கள். அதேபோல், அகம் ஒரு விழியும், புறம் ஒரு விழியும், திறம் இவர் மொழியும், அன்பின் இளவல், பண்பின் பனுவல், விடியலின் விடிவெள்ளி, அமைதியின் அடிநாதம், இதயம் நிறைந்த உதயம் துணை முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். (மேசையைத் தட்டும் ஒலி)

ஆன்றோர், அமைச்சர் பெருமக்கள் சட்டமன்றத்தில் நிறைந்திருக்கும் சான்றோர் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்தினை தெரிவித்துள்ளார்கள். அதிலே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் 6 நபர்களும், அ.தி.மு.க. உறுப்பினர்கள் 3 நபர்களும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் 2 நபர்களும், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த ஒரு உறுப்பினரும், ம.தி.மு.க உறுப்பினர் ஒருவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் ஒருவரும், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி உறுப்பினர் ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவரும், இங்கே பேசினார்கள். யாரும் குறை சொல்லவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் இங்கேஎதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், அள்ளி வீசிய புள்ளிவிவரம் தெரியாமல் அள்ளி வீசுகின்ற குற்றச்சாட்டுகள். வேளாண்மை பட்ஜெட்டை ஏன் போட்டீர்கள்? ஒன்றுமே இல்லை.

4 ஆண்டுகள், 5 ஆண்டுகள் அந்த பட்ஜெட் பற்றி பேசும்போது ஒரு எதிர் கருத்தும் கூறாதவர்கள், இன்றையதினம் தேர்தல் வருகின்ற காரணத்தால் வேளாண் பட்ஜெட்-- ஏனென்றால் உழவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். விவசாயிகளெல்லாம் அன்றாடம் போராட்டம், போராட்டம் என்று அந்த 10 ஆண்டுகால ஆட்சியிலே போராட்டத்தில் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை; எந்தவித முன்னேற்றமும் இல்லை; வளர்ச்சியும் இல்லை. ஆக வளர்ச்சியுறாதவர்கள் வளர்ச்சி குறைந்ததென்று இப்போது ஒரு தவறான புள்ளிவிவரத்தை நாட்டுமக்களுக்கு தெரிவிக்கின்றார்கள்.

அதேபோல, இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் அவர்கள் அறிவித்து, அறிவித்ததோடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் கருத்துகளையும் உள்வாங்கி, அவர்களுடைய கருத்தில் அவர்களை முன்னிட்டு, அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதை நாம் நிதிநிலையில் அறிக்கையில் கொண்டுவர வேண்டும். அதன்மூலமாக திட்டங்கள் தயாரிக்க வேண்டுமென்று கருத்து கேட்டு அதற்கேற்ப இங்கே பல விவசாயிகள் தங்களுடைய கருத்துகளைக் கூறி, அந்தக் கருத்துகளை உள்வாங்கி, அதன் அடிப்படையிலே நாங்கள் இந்தத் திட்டத்தை தீட்டினோம். ஆக வேளாண்மை நிதிநிலை அறிக்கை பற்றி கேட்ட மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களுக்கு நான் சொல்கிறேன். மாநிலத்தினுடைய பொருளாதார வளர்ச்சி, முதன்மைப் பிரிவில் ஏற்படும் முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. முதன்மைப் பிரிவில் வேளாண்மை மட்டுமில்லாமல், கால்நடை, மீன்வளம், கனிம வளம், வனம் மற்றும் மரம் வெட்டுதல் ஆகிய தொழில்களும் அடங்கும். வேளாண்மை என்பது பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மட்டுமே சார்ந்திராமல் கால்நடைகள், பண்ணையில் வளர்க்கப்படும் மீன்கள், பட்டுப்பூச்சி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற பல்வேறு உப தொழில்களையும் உள்ளடக்கியது. வேளாண்மை செழித்து விளங்கவும், நிலம் மற்றும் நீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேளாண்மைத் துறையுடன் கூட்டுறவுத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சீரான பங்களிப்பும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் உறுதுணையும் மிக அவசியம். இதோடுமட்டுமல்லாமல், உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைப் பொருட்களை உரிய முறையில் கொள்முதல் செய்து, விற்பனை செய்திட உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் உதவியும் தேவை. எரிசக்தி, நீர்வள ஆதாரத் துறையின் ஒருங்கிணைப்பு இருந்தால்தான் வேளாண்மையில் உயர் வளர்ச்சி அடைய முடியும். எனவேதான், வேளாண்மை மற்றும் அது சார்ந்துள்ள சார்புத் துறைகளை இணைத்து தமிழ்நாட்டில் வேளாண்மை தழைத்தோங்கிட, வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை இன்றியமையாதது எனக் கருதி, மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக 2021-2022 ஆம் ஆண்டில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையைக் கொண்டுவந்தார்கள். கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை அறிமுகப்படுத்தியிருந்தாலும், அவர்களால் தொடர்ந்து தனி நிதிநிலை அறிக்கை அளிக்க இயலாத நிலையில்,முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலால் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக இப்பேரவையில் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டு, விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை அறிவித்து, ஐந்தாண்டுகள் பெரும் தொகையாக 1 இலட்சத்து 94 ஆயிரத்து 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்கள். 2026-2027 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 47 ஆயிரத்து 248 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இது 2021-2022 ஆம் ஆண்டு வேளாண் தனி நிதிநிலை அறிக்கையில் கொடுக்கப்பட்ட தொகையைவிட சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாகும். இதன்படி 2021-2022 ஆம் ஆண்டு முதல்

2025-2026 ஆம் ஆண்டு வரை அனைத்து மாவட்டங்களிலும் 28 கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. 4 ஆயிரத்து 478 விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. 682 அறிவிப்புகள் செய்யப்பட்டு, 676 அறிவிப்புகளுக்கு அரசாணை வழங்கப்பட்டது. 4 ஆயிரத்து 478 விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு, அந்த கருத்துகளை ஒருங்கிணைத்து 682 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு, அதில் 676 அறிவிப்புகளுக்கு அரசாணை வழங்கப்பட்டு, 652 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. (மேசையைத் தட்டும் ஒலி) இதில் இவ்வளவு கருத்துகளை உள்வாங்கியிருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள மண்ணுக்கேற்ற விவசாயம், பல மாவட்டங்களில் மண் வேறுபாடுகள் இருக்கின்றன. அந்த வேறுபாடு மண்ணுக்கேற்ற விவசாயத்தை உருவாக்கி, விவசாயிகளுடைய கருத்துகளையெல்லாம் உள்வாங்கி, அதை ஒவ்வொரு திட்டமாக செய்த காரணத்தால்தான் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக்கேட்பு கூட்டத்தில், அவர்கள் சொன்ன கோரிக்கையை, நாம் மாவட்ட ஆட்சியர் கருத்துக்கேட்பு கூட்டத்தில் சொன்னோம். இந்தத் திட்டம் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். உடனுக்குடன் அறிவிப்பு செய்து அந்தத் திட்டத்தையும் துவங்கியிருக்கின்றோம் என்ற திருப்தி மக்களுக்கும் இருக்கிறது, விவசாயிகளுக்கும் இருக்கிறது. அந்த அடிப்படையிலேதான், இந்த வேளாண்மை வளர்ச்சி, இந்த துறையில் 5 ஆண்டு காலத்தில் தனி பட்ஜெட் போடப்பட்டதன் விளைவு அந்த கருத்துக்கேட்புகூட்டம். இது அவர்களுடைய ஆட்சியில் வேளாண்மைத் துறை பட்ஜெட் கிடையாது, demand, மானியக்கோரிக்கை. அந்த மானியக் கோரிக்கைக்கு கருத்தும் கேட்ட இல்லை, எதுவும் கேட்பது இல்லை, ஒன்றும் செய்யவில்லை. ஆனால், இப்போது என்ன சொல்லபோனால் விவசாயிகள் செத்தார்கள். விவசாயிகள் போராட்டம் செய்து 102 விவசாயிகள், அவருடைய ஆட்சி காலத்தில், அ.தி.மு.க. ஆட்சியில் இறந்திருக்கின்றார்கள், தற்கொலை செய்திருக்கிறார்கள், அவர்களுக்கு அரசாணையின்மூலமாக இறந்த ஒவ்வொரு விவசாயிகளுக்கு 3 இலட்சம் ரூபாய் அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள். அதற்கு அரசாணையின் மூலமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயின் குடும்பத்திற்கு பணம் கொடுத்திருக்கின்றார்கள். இது அவர்களுடைய ஆட்சியில் நடந்தது. ஆனால், இந்த நான்கு ஆண்டு காலத்தில், இந்த ஐந்தாண்டு நிறைவு பெறுகின்ற காலத்தில் இதுவரையில் விவசாயிகளுடைய தற்கொலையும் கிடையாது. விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் அதாவது இயற்கை இடர்பாடுகளுக்குகெல்லாம் உடனடியாக நிவாரணம் வழங்கப்படுகிறது. உடனடியாக நேரடியாகமுதலமைச்சர் அவர்கள் spot verification செய்கிறார்கள். நேரடியாக திருவாரூர் மாவட்டமாக இருந்தாலும் சரி, கடலூர் மாவட்டமாக இருந்தாலும் சரி , மயிலாடுதுறை மாவட்டமாக இருந்தாலும் நேரடியாக செல்வார். வெள்ளம் பாதித்தால், புயல் அடித்தால் உடனடியாக நேரடியாக சென்று பார்க்கக்கூடிய முதலமைச்சர் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) அதனால் கிட்டத்தட்ட 2,038 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. மேட்டூர் அணையை ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு அங்கு சென்று, தண்ணீரை உரிய காலத்தில் திறந்துவிட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உருவாக்கினார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) கடந்த ஆட்சியில் இருந்த முதலமைச்சர்கள் இருந்தார்கள், அவர்கள்

சென்றார்களா? மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்தார்களா? நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளை மதிக்கின்றார். மதிக்கின்ற காரணத்தால்தான் மேட்டூருக்கு ஜூன் 12 ஆம் தேதியன்று மேட்டூருக்கு நேரடியாக சென்று தண்ணீரை திறந்துவிட்டு, அந்த விவசாயிகளை நேரடியாக பார்க்கக்கூடியவர். இதற்குமுன்பு அவர்களுடைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் --ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் பாதிக்கப்பட்ட வயல்களை நேடியாக--என்னுடைய தொகுதி, கடலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்திற்கு நாங்கள் டிராக்டரில் சென்று பார்த்தோம். முதலமைச்சர் அவர்கள் டிராக்டரில் உட்கார்ந்து அங்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளை பார்த்துவிட்டு வந்தார்கள். ஆக நேரடியாக பார்க்கக்கூடிய காரணத்தால்தான் உடனுக்குடன் அவர் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார். முதலமைச்சர் அலுவலகத்தில் இருக்கின்ற அதிகாரிகளும், விவசாயிகளுக்கு எந்த திட்டமாக இருந்தாலும் உடனடியாக அதை நிறைவேற்றுவதற்கு அவர்கள் ஆணைவழங்குகின்றார்கள். துறையினுடைய அதிகாரிகளும் அதேபோல பணியாற்றிக்கொண்டிருக்கின்றோம். ஆக மக்கள் சிறப்பாக வாழ்கின்றார்கள். இன்னும் அதிகமான திட்டம் இருக்கின்றது. இப்போது வேளாண்மை பட்ஜெட் போடப்பட்டதன் காரணமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை, சொர்ணாவாரி பருவங்களின் நெல் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்புத் திட்டம், நெல் ஜெயராமன் அவர்களின் மரபு சார் நெல் இரகங்கள் பாதுகாப்புத் திட்டம், அதேபோல குறுவை பருவத்தில் மாற்றுப்பயிர் சாகுபடி சிறப்பு தொகுப்பு, இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஆதி திராவிடர் பழங்குடியினர் உயர் மதிப்புத் திட்டங்களின் 70 சதவிகித மானியம், மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம், தமிழ்நாடு உயிர்ம வேளாண்மை இயக்கம், பனை மேம்பாட்டு இயக்கம், முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள், தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம், சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாருதல், இந்தப் பிரிவு வாய்க்கால்கள் கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகாலமாக கிராமத்தில் உழவர்கள் அவர்களாகவே சென்று வாய்க்கால்களை தூர்வாருகின்ற பணி, அதற்கு நம்முடைய முதல்வர் அவர்களின் ஆட்சியில்தான் சி மற்றும் டி வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரும் பணி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டதுடன், 100 மதிப்புக் கூட்டும் மையங்கள், சிறந்த உயிர்ம வேளாண்மை உழவருக்கான ‘நம்மாழ்வார் விருது’, உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், வேளாண் கல்வியில் தமிழ் பயிற்றுமொழி மற்றும் மாணவர் சேர்க்கை, 3 புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள் மற்றும் ஒரு தோட்டக் கலைக் கல்லூரி, பலா இயக்கம், முருங்கை இயக்கம், வெங்காய சாகுபடி இயக்கம், மிளகாய் மண்டலம், கறிவேப்பிலை தொகுப்பு, முக்கனி மேம்பாட்டுத் திட்டம், அதேபோல மா ஏற்றுமதிக்கான முனைப்புகள், புதிய பூங்காக்கள் உருவாக்கம், மின்னணு பயிர் சாகுபடி பரப்புக் கணக்கீடு, விதைப்பு முதல் அறுவடை வரை இயந்திர மையமாக்குதல், உழவர் அங்காடிகள், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி, மேலும், குறுவை தொகுப்புத் திட்டம், மேட்டூர் அணையை உரிய காலத்தில் திறந்து, அந்தக் குறுவை தொகுப்பிற்கு 482 கோடி ரூபாய் செலவில் நிதியை வழங்கி, இதன் மூலமாக 19 இலட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளார்கள். டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு முதல் நெல் சாகுபடி சிறப்புத்

திட்டம் 115 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதனால் 3 இலட்சம் ஏக்கர் கூடுதலாக கார், குறுவை, சொர்ணாவாரி பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற வளர்ச்சி இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையின் காரணத்தால் ஏற்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் தற்போது இல்லை, இதையெல்லாம் கேட்பதற்கு அவர்களுக்குத் தைரியம் இல்லை. அத்தகைய தைரியம் இல்லாத காரணத்தால்தான் இந்தச் சட்டமன்றத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த இடத்தில் அடுத்து 2026-ல் அவர்கள் இருக்கமாட்டார்கள்; (மேசையைத் தட்டும் ஒலி) நாம்தான் இருப்போம். நம்முடைய மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் படித்த சாதனைகள் மக்களுக்குச் சென்றிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், பத்து ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாகத்தான் நாங்கள் அவ்வளவு வேலை செய்தோம். தற்போது ஆளுங்கட்சியான பிறகும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதற்கொண்டு தூங்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, நாங்கள் எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம், எல்லோரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம், மக்களை நாங்கள் சந்தித்துக்கொண்டு, மக்களுடைய பிரச்சினைகளை நாங்கள் உடனுக்குடன் தீர்த்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய சாதனை புரிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதற்கு இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை ஒரு காரணம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, 2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைகால வேளாண்மை வரவு-செலவுத் திட்டத்திற்கு இந்த அவையின் ஒப்புதலைப் பெற்றுத்தருமாறு தங்களை வேண்டி, வெற்றிகரமான இந்த நிருவாகத்திற்கு உறுதுணையாக இருந்த வேளாண் துறையைச் சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும், முதல்-அமைச்சர் அவர்களுடைய அலுவலகத்தைச் சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும், முதன்மைச் செயலாளர் முதற்கொண்டு அனைத்து அதிகாரிகளுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு, முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு, 2026-ல் உங்களுடைய தலைமையில்தான் ஆட்சி என்பதைத் தெரிவித்துக்கொண்டு (மேசையைத் தட்டும் ஒலி) வாய்ப்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன், நன்றி, வணக்கம். (மேசையைத் தட்டும் ஒலி)