சென்னை,
டிரைடண்ட் ஆர்ட்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் விஷால் நடித்து, தயாரித்துள்ள திரைப்படம் சக்ரா. இந்த படத்தின் கதையை, அதன் இயக்குனர் ஆனந்தன் முதலில் என்னிடம் சொன்னார். பின்னர், படமாக்குவதற்கு என்னிடம் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால், விஷால் நடிப்பில் சக்ரா படத்தை எடுத்துள்ளார். இது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரவி தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியன், மனுதாரர் தரப்பிடம் காப்புரிமை உள்ள நிலையில் சக்ரா படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார். வழக்கிற்கு பதில் அளிக்கும்படி நடிகர் விஷால், படத்தின் இயக்குனர் ஆனந்தன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைத்தார்.