சென்னை,
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என்று குற்றம்சாட்டி, கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். என்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு வாசித்த கவர்னரின் தமிழ் உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது. அத்துடன் அப்போதைய கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
இந்நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் கூட இருக்கிறது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வழக்கம்போல இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் குறித்த தகவல்கள் ஒவ்வொரு உறுப்பினருக்கும் முன்னால் உள்ள சிறிய கணினியான டேப்-ல் பார்த்து தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதே நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை மற்றும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவை வருகிற 20-ந் தேதி அவைக்கு அளிக்கப்பட உள்ளது. இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதன்பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட் டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்? என்பதற்கான முடிவுகள், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும்.
இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் (அதாவது 20-ந் தேதி வரை) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தளிக்கும் இடைக்கால பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். அந்த விவாதங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார்.
சட்டசபை தேர்தல் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர் பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டை ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கடுமையான தேர்தல் போட்டி நிலவுவதால், மக்களை கவரும் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், மகளிர் உரிமைத்தொகை, சிறப்புத்தொகை என ரூ.5 ஆயிரத்தை பெண்களுக்கு அனுப்புவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்கான நிதி ஆதாரங்களை கேட்டு அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அவையில் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள் பற்றி அவையில் பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொள்ளும். இதில் வெளிநடப்பு, வெளியேற்றம் போன்ற சம்பவங்கள் நேரிடவும் வாய்ப்புள்ளது. அரசியல் ரீதியாக கவனித்தால், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளிடையே இன்னும் ஏற்படாத கூட்டணி உறவும் இந்த கூட்டத்தொடரில் எதிரொலிக்கக்கூடும்.
வேளாண் பட்ஜெட்டும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை அவையில் படிப்பார்.
இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் சிறுபான்மையினர் மக்களையும், இளைஞர்களையும் கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும்நிலையில், என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெறப்போகிறது? என்பதை தெரிந்துகொள்ள தமிழக மக்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.