தமிழக செய்திகள்

சர்வதேச அருங்காட்சியக தினம்: திருநெல்வேலி அறிவியல் மையத்தில் நாளை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி

சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ம்தேதி கொண்டாடப்படுகிறது. சர்வதேச அருங்காட்சியக கவுன்சில் (International Council of Museums-ICOM) இந்த தினத்தை ஏற்பாடு செய்கிறது. இந்த நாளில் அருங்காட்சியகங்கள் மற்றும் அவற்றின் கலைப்பொருட்கள் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்காகவும், அருங்காட்சியகங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் விதமாகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் சர்வதேச அருங்காட்சியக தினம் 2026-ஐ (International Museum Day) கொண்டாடும் விதமாக நேற்று முதல் 3 நாட்கள் (மே 16, 17, 18) ஆகிய 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி நேற்று (மே 16) பிரிந்த உலகை ஒன்றிணைக்கும் அருங்காட்சியகங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள், புதையல் வேட்டை போட்டி, அருங்காட்சியக பொருத்துதல் போட்டி ஆகியவை நடைபெற்றன. இன்று (மே 17) பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.

நாளை (மே 18) பழம்பொருள் பேசினால் என்ற தலைப்பில் திருநெல்வேலி தமிழ் எக்கோஸ் வானொலியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உமா ராஜ் வழங்கும் கதை சொல்லி என்ற நிகழ்ச்சியும், பிரிந்த உலகை ஒன்றிணைக்கும் அருங்காட்சியகங்கள் என்ற தலைப்பில் மைசூர் மற்றும் போபாலில் உள்ள இயற்கை வரலாற்றுக்கான மண்டல அருங்காட்சியகங்களின் முன்னாள் இயக்குனரும், முனைவருமான சேதுராமலிங்கம் பேசும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து இரவு 8.30 மணி வரை தொலைநோக்கி மூலம் சிறப்பு வானியல் பார்வை என்ற நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம். ஆனால் முன்பதிவு கட்டாயம் தேவை.

சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நாளை (மே 18) ஒரு நாள் முழுவதும் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்படுகிறது. 3D காட்சிகளுக்கு தனி நுழைவு கட்டணம் உள்ளது. குடும்பத்தினரும் நண்பர்களும் இணைந்து வந்து அறிவியல் உலகை அனுபவிக்க வாருங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.