தமிழக செய்திகள்

பணியிடமாற்றம், பணிநீக்கம் செய்யும் முன் விசாரணை அவசியம்: டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், நியாயமான வெளிப்படையான துறைரீதியான விசாரணை நடத்தி, ஊழியர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்க வேண்டும்.

சென்னை,

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம், பணியிடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், குற்ற குறிப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஜூலை 24-ந் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தது.

சென்னை ஐகோர்ட்

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் செயலாளர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி கே.சுரேந்தர் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் கே.பாரதி ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, "இயற்கை நீதியைப் பின்பற்றாமல், பணியாளர்களுக்கு எதிராக எந்த ஒரு தண்டனை நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், நியாயமான வெளிப்படையான துறைரீதியான விசாரணை நடத்தி, ஊழியர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்க வேண்டும். சாட்சிகளை விசாரிக்க வேண்டும். ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொழில் பாதுகாப்பை இந்த சுற்றறிக்கை மீற முடியாது.

உத்தரவு

எனவே, இயற்கை நீதியையும், பணி விதிகளையும் பின்பற்றாமல், ஊழியர்களுக்கு எதிராக கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது. தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க போதிய வாய்ப்புகளை வழங்காமல், எந்த ஒரு டாஸ்மாக் ஊழியர்களையும் பணியிட மாற்றம், பணிநீக்கம் உள்ளிட்ட தண்டனைகளை வழங்கக்கூடாது" என்று உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT