சென்னை,
பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிலிருந்த எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பு குறித்து மேடைகளில் பேசுவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு எவ்வித அரசியல் தலையீடுமின்றி நீதி கிடைப்பதை முதலமைச்சர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதை, தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்.
வழக்கு பதிவு செய்து கைது செய்ய அனைத்து முகாந்திரங்கள் இருந்த போதிலும், செய்தி வெளிவந்து பல நாட்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் மேடைகளில் பேசுவது மட்டும் போதாது. ஒரு பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.