தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் ஏற்றுமதியை விரிவுபடுத்த முதலீட்டாளர்கள் ஆலோசனை

தரச்சான்றிதழ்கள் மற்றும் சர்வதேச தரநிலைகள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

சென்னை,

சென்னையில், தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையும், இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அயல் நாட்டு வர்த்தகத் தலைமை இயக்குனரகமும் இணைந்து, "தடை யற்ற வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்துதல் இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கான உலகளாவிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல்" என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை நடத்தின.

இதில் 400-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள், பெண் தொழில் முனைவோர், ஏற்றுமதி மற்றும் வர்த்தகச் சங்கங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இந்தியா பல்வேறு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் வர்த்தகச் சலுகைகள், ஏற்றுமதிக்கான ஆவண நடைமுறைகள், தரச்சான்றிதழ்கள் மற்றும் சர்வதேசத் தரநிலைகள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் பயன்கள் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், புதிய ஏற்றுமதியாளர்கள் மற்றும் மாவட்ட அளவிலான உற்பத்தியாளர்களுக்கும் சென்றடைவதை உறுதிசெய்வதன் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.

ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், வேளாண்மை, உணவுப்பதப்படுத்துதல் மற்றும் கடல்சார் பொருட்கள், தோல் மற்றும் காலணிகள், ரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல், வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்ப வன்பொருள் ஆகிய 6 முக்கியத் துறைகளில் தனித்தனியாகச் சிறப்புக் கலந்துரையாடல் அமர்வுகள் நடைபெற்றன.

SCROLL FOR NEXT