தமிழக செய்திகள்

ஐ.பி.எல். டிக்கெட் வைத்திருப்பவர்கள் நாளை மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம்

ஐ.பி.எல். டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரெயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நாளை (திங்கள்கிழமை) கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக ரசிகர்களுக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணங்களும், கூடுதல் மெட்ரோ ரெயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்பான்சர் செய்யப்பட்ட ஐ.பி.எல். போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் பயணச்சீட்டுகளில் உள்ள கியூ-ஆர் குறியீட்டை தானியங்கி நுழைவு எந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம்.

சென்னையில் உள்ள எந்த ஒரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரெயிலில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். ஐ.பி.எல். போட்டியை காண செல்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.