சென்னை,
சமையலுக்கு நாம் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவை மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் 6 லட்சம் டன் பாமாயில், 3 லட்சம் டன் சோயா எண்ணெய், ஒரு லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதற்கான இறக்குமதி வரி 26.5 சதவீதம் என்ற அளவில் விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இறக்குமதி வரியை 16.5 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இதனால், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் ஆகியவை லிட்டருக்கு ரூ.10 விலை குறைந்தது.
ஆனால், தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ரூ.155-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் தற்போது ரூ.170 ஆக விலை அதிகரித்துள்ளது. அதேபோல், ரூ.110-க்கு விற்பனையான ஒரு லிட்டர் பாமாயில் தற்போது ரூ.122 என்ற விலை உயர்ந்துள்ளது.
இதுதவிர, கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் விலையும் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை விலை அதிகரித்துள்ளது.