சென்னை,
ஐ.ஆர்.சி.டி.சி. வரலாற்றில் புதிய சாதனையாக ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய் யப்பட்டு உள்ளன.
இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளத்தின் மூலம் ஏராளமான பயணிகள் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களுக்கு நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாததால், பொதுமக்கள் இந்த வசதியை பெரிதும் விரும்புகின்றனர்.
தங்கள் செல்போனில் உள்ள செயலி மூலமாகவே, தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே எளிமையாக டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். சாதாரண நாட்களை விட, பண்டிகை காலங்களில் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில், பயணிகள் அனைவரும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தைப் பயன்படுத்தி முன்பதிவு செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வருகிற நவம்பர் 8-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கான 60 நாட்கள் முன்னதாகச் செய்யும் ரெயில் டிக்கெட் முன்பதிவு கடந்த 5-ந்தேதி தொடங்கியது. இதனால் சொந்த ஊர்களுக்குச் செல்ல நினைக்கும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். இதன் காரணமாக, கடந்த 7-ந்தேதி ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 20 லட்சத்து 6 ஆயிரத்து 353 டிக்கெட்டுகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் வெற்றிகரமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐ.ஆர்.சி.டி.சி. வரலாற்றில் 20 லட்சம் என்ற எண்ணிக்கையை ஒரே நாளில் கடந்து, ஆன்லைன் ரெயில் டிக்கெட் முன்பதிவில் புதிய உலகளாவிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ந்தேதி பண்டிகை காலத்தில் 18.40 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது. இதேபோல, கடந்த 8-ந்தேதி சுமார் 19 லட்சத்து 50 ஆயிரத்து 699 டிக்கெட்டுகள் முன்பதிவாகின. இது கடந்த ஆண்டின் பண்டிகைக் கால முன்பதிவை விட 6 சதவீதம் அதிகமாகும்.
ஐ.ஆர்.சி.டி.சி. தரவுகளின்படி, முன்பதிவு திறக்கப்படும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலான முதல் ஒரு மணி நேரத்தில் ஒட்டுமொத்த நாளின் டிக்கெட்டுகளில் 8.43 சதவீதம் முதல் 14.14 சதவீதம் வரை மட்டுமே பதிவாகிறது. குறிப்பாக, காலை 8 மணி முதல் 8.15 மணி வரையிலான முதல் 15 நிமிடங்களில் அதிவேக முன்பதிவும் நடைபெறும். மீதமுள்ள 85 சதவீதத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் அந்த நாளின் அடுத்தடுத்த மணி நேரங்களில் நிதானமாக பதிவு செய்யப்படுகின்றன.
கூட்ட நெரிசலையும், பயனர்களின் தேவையையும் சமாளிக்கும் பொருட்டு ஐ.ஆர்.சி.டி.சி.யின் தொழில்நுட்ப கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு. புதிய 'சர்வர்'கள் மூலம் அதன் செயல்திறன் மற்றும் வேகம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான முன்பதிவின் போதும் இணையதளத்தில் பெரிய அளவில் எந்தவொரு தொழில்நுட்பக் கோளாறோ அல்லது முடக்கமோ ஏற்பட வில்லை.
இதேபோல, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய, சட்ட விரோதமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு எதிராக ஐ.ஆர்.சி.டி.சி. கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் போலி இணையதள முன்பதிவு 55 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கும் முதல் 10 நிமிடங்களுக்கு (காலை 8 முதல் 8.10 வரை) பொது அங்கீகாரம் பெற்ற முகவர்கள் டிக்கெட் புக் செய்ய தடையும் விதிக்கப்பட்டது.
அதிரடி தணிக்கை மூலம் சுமார் 3.04 கோடி போலி பயனர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் 6.33 கோடி கணக்குகள் மறு-சரிபார்ப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் ரெயில்களில் முன்பதிவு செய்யப்படும் மொத்த டிக்கெட்டுகளில் சுமார் 89 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்யப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.