பெரியார் அறிவுலகம் 
தமிழக செய்திகள்

பெரியார் அறிவுலக முறைகேடு - வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத் துறை

நூலகங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி, முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய பஸ் நிலையம் எதிரே பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் பிரமாண்டமான நூலகம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் ரூ.300 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட இந்த நூலகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். தரைத்தளத்துடன் சேர்த்து மொத்தம் 7 தளங்களுடன் இந்த நூலகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அதில் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், விண்வெளி கோளரங்கம், முதல்தளத்தில் கண்காட்சி அரங்கம், வரவேற்பு மையம், 2-ம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம், 3-வது தளத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நூலகம், 4-ம் தளத்தில் தமிழ், வரலாற்று நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவுகள் உள்ளன. 5 மற்றும் 6-வது தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, 7-ம் தளத்தில் டிஜிட்டல் நூலகம் ஆகியவை உள்ளன.

மீண்டும் குற்றச்சாட்டு

இந்த நூலகத்தில் 4-வது தளத்தில் அகல்விளக்கு, பீனிக்ஸ் ஆகிய பதிப்பகத்தில் இருந்து வாங்கிய புத்தகங்களில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அங்கு இருந்த 1500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அகற்றப்பட்டன. தற்போது அந்தப்பகுதியில் வேறு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த முறைகேடுகள் தொடர்பாக நேற்று பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி எழுப்பி இருந்தது. இந்நிலையில், நூலகங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி, முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT