சென்னை,
தரமற்ற நூலக புத்தக கொள்முதல் முறைகேடு; உயர்மட்ட விசாரணை நடத்த எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல். இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொறுப்பு தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-
கோவை மாநகரில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், போலி முகவரிகள் கொண்ட பதிப்பகங்கள் மூலமாக தரமற்ற போலியான புத்தகங்கள் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் மூத்த எழுத்தாளர் பெருமாள் முருகன் சிந்தை தளத்தில் எழுதிய கட்டுரை மூலம் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ் அறிவுலகத்தின் அடையாளமாக திகழ வேண்டிய ஒரு பொது நூலகத்தில், மக்களின் வரிப்பணத்தை சுருட்டுவதற்காக இத்தகைய முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டிருப்பதை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
குறிப்பிட்ட சில நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்களில் சங்க இலக்கியங்கள் குறித்த தவறான குறிப்புகள், மொழிநடை சிக்கல்கள் மற்றும் தமிழக அரசியல் வரலாற்று தரவுகளில் பிழையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. முறையான தரவுகளின்றி, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் அவசர அவசரமாக பக்கங்களை நிரப்பி அச்சிடப்பட்ட நூல்களுக்கு மிக அதிக விலை நிர்ணயம் செய்து பெருமளவில் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்நூல்களின் ஆசிரியர்கள் பெயர்களும், பதிப்பகங்களின் முகவரிகளும் போலியானவை என கண்டறியப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
நூலகங்கள் என்பவை ஒரு சமூகத்தின் வரலாற்று பேழை மற்றும் எதிர்கால தலைமுறையின் அறிவு சுரங்கமாகும். அங்கே தவறான வரலாற்றையும் பிழையான தகவல்களையும் கொண்ட போலி நூல்களை இடம்பெறச் செய்வது, நமது மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் செய்யப்படும் பெருந்துரோகமாகும். இது வெறும் நிதி ஊழல் மட்டுமல்ல; தமிழ் அறிவுலகத்திற்கே நேர்ந்த பெரும் அவமானமாகும். இத்தகைய பெரும் முறைகேடு பெரியார் அறிவுலகத்தில் மட்டும் நடந்துள்ளதா அல்லது தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களிலும் பரவியுள்ளதா என்ற கடுமையான சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, இப்புத்தக கொள்முதல் ஊழல் குறித்து விசாரிக்க சென்னைஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் மூத்த எழுத்தாளர்கள் கொண்ட உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. மேலும், தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பொது நூலகங்களிலும் இதுபோன்ற போலி நூல்கள் வாங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான தணிக்கை நடத்தப்பட வேண்டும்.
போலி முகவரிகள் மூலம் அரசை ஏமாற்றி பணம் சுருட்டிய பதிப்பகங்கள் மற்றும் அதற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, கையாடல் செய்யப்பட்ட நிதியை மீட்க வேண்டும். அத்துடன், பிழைகள் நிறைந்த அனைத்து போலி நூல்களையும் நூலக அலமாரிகளிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.