தமிழக செய்திகள்

தூய்மை இந்தியா திட்டத்தில் முறைகேடு; சிபிசிஐடி விசாரணை வேண்டும் - வேல்முருகன்

சென்னையில் மட்டும் பொது கழிவறை பராமரிப்பு பணிகளில் ரூ. 700 கோடி மோசடி நடந்துள்ளதாக வேல்முருகன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

முறைகேடு

தமிழ்நாட்டில் தூய்மை இந்தியா திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு – சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் என எல்லா நிலைகளிலும் ஊழல்களும் முறைகேடுகளும் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து வரும் இந்த முறைகேடுகளை சிபிசிஐடி (குற்றப்புலனாய்வுத் துறை) விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

தூய்மை பாரத இயக்கம்

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 145ஆவது பிறந்தநாளை ஒட்டி, 2014 அக்டோபர் 2 அன்று பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். முன்பு செயல்பாட்டில் இருந்த நிர்மல் பாரத் அபியான் திட்டம் மறுசீரமைக்கப்பட்டு, புதிய இலக்குகளுடன் தூய்மை பாரத இயக்கம் (Swachh Bharat Mission - SBM) என்ற பெயரில் கிராமப்புறங்களில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக திறந்தவெளி மலம் கழித்தலை முற்றிலும் ஒழித்தல் (Open Defecation Free - ODF) கிராமப்புற மக்களிடையே தூய்மை மற்றும் சுகாதாரப் பழக்கங்களை வளர்த்தல் ஊராட்சிகளில் திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை அறிவியல் பூர்வமாகச் செயல்படுத்துத்தப்பட்டது.

கழிவறை கட்ட நிதியுதவி

இரண்டாம் கட்டமாக மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளான 2019 அக்டோபர் 2க்குள் இந்தியாவை முழுமையாக ODF நாடாக மாற்றுவதே இலக்காக இருந்தது. தற்போது ODF நிலையைத் தக்கவைத்தல் மற்றும் கிராமங்களை ODF Plus நிலைக்கு உயர்த்துதல் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் (BPL) உள்ள குடும்பங்கள் மற்றும் தகுதியான APL குடும்பங்களுக்கு (SC/ST, சிறு/குறு விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்) தனிநபர் கழிவறை கட்ட ₹12,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசு 60% (₹7,200) மற்றும் மாநில அரசு 40% (₹4,800) பங்களிக்கின்றன.

பணம் மோசடி

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டபோது பல கிராமங்களில் கழிவறைகள் கட்டப்படாமலேயே: போலி புகைப்படங்கள் (மார்பிங் / போட்டோஷாப் எடிட்டிங்) தயாரித்தல் ஏற்கெனவே உள்ள கழிவறைகளுக்கு புது வண்ணம் பூசி புகைப்படம் எடுத்தல் பயனாளிகளின் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைப் பயன்படுத்தி பணத்தை மோசடி செய்தல்.

ஒரே கழிவறையை பல கோணங்களில் படமெடுத்து பல பயனாளிகளுக்கு உரியதாகக் காட்டுதல் போலி ஆவணங்கள் மற்றும் கணக்குகள் உருவாக்குதல் என இம்முறைகேடுகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கணினி அமைப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சஸ்பெண்ட்

லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) மற்றும் மாவட்ட நிர்வாகம் நடத்திய சோதனைகளில் பல இடங்களில் காகிதத்தில் மட்டுமே கழிவறைகள் இருந்ததும், உண்மையில் எதுவும் கட்டப்படவில்லை என்பதும் தெரியவந்தது. பல அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

2021ஆம் ஆண்டு முதல் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளிலும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகமாகக் காட்டி மோசடி

பொது மற்றும் சமுதாய கழிவறைகள், நடமாடும் கழிவறைகள் எனக் கூறி நிதி ஒதுக்கீடு செய்து மோசடி

தனியார் வசம் கொடுத்ததாகக் காட்டி கட்டடங்களே கட்டாமல் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

ரூ. 2,000 கோடிக்கும் மேல்..

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகராட்சிகளில் இந்த முறைகேடுகள் அதிகமாக நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் பொது கழிவறை பராமரிப்பு பணிகளில் ரூ. 700 கோடி மோசடி நடந்துள்ளதாகவும், மொத்தமாக தமிழ்நாட்டில் ரூ. 2,000 கோடிக்கும் மேல் செலவு செய்ததாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியா முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட தனிநபர் கழிவறைகள் கட்டப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள மாபெரும் முறைகேடுகள் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

எனவே தூய்மை இந்தியா திட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் பரவலாக நடைபெற்றுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகளை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.