தமிழக செய்திகள்

பல்வேறு பணிகளில் முறைகேடு: கோவை மாநகராட்சிக்கு ரூ.2,300 கோடி இழப்பு

சொத்து வரி மூலம் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை,

கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளில் நடைபெற்ற முறைகேடு காரணமாக ரூ.2,300 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தணிக்கை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

தணிக்கை அறிக்கை

கோவை மாநகராட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை நடைபெற்ற திட்ட பணிகள் குறித்து த.வெ.க. ஆட்சி அமைந்ததும் சிறப்பு தணிக்கை நடந்தது. இதன் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் சொத்துவரி, திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, வெள்ளலூர் குப்பை கிடங்கு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள் ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக சொத்து வரி மூலம் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.2 ஆயிரம் கோடி

அதாவது, சொத்துவரியை யு.டி.ஐ.எஸ். சர்வரில் முறைப்படுத்தாததால் ரூ.1,194 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வணிகம், தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கான சொத்து வரி விதித்ததில் ரூ.87.17 கோடி, வீடுகளுக்கு வழங்கும் குடிநீர் இணைப்பை வணிக பயன்பாட்டுக்கு வழங்கியதில் ரூ.158.31 கோடி, நிதிக்குழு பரிந்துரையை மீறி சொத்து வரி தள்ளுபடி செய்ததில் ரூ.34.60 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அனுமதி இல்லாத கட்டிடங்களுக்கு சட்ட நடவடிக்கை இல்லாமல் சொத்துவரி விதித்ததில் ரூ.274 கோடி, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சொத்துவரி வசூல் செய்யாததில் ரூ.82.25 கோடி, நீண்டகாலமாக காலியிட வரி வசூல் செய்யாததில் ரூ.136 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. கிழக்கு மண்டலத்தில் 15 கட்டிடங்களில் புதிதாக மொபைல் டவர் அமைக்கப்பட்டது. இதற்கு வரி நிர்ணயிக்கவில்லை. இவ்வாறு சொத்து வரியில் மட்டும் ரூ.2 ஆயிரத்து 53 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

திடக்கழிவு மேலாண்மை

இது தவிர திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கையாண்டதில் ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. வெள்ளலூரில் திடக்கழிவு மேலாண்மைக்காக 2 வாகன எடை மேடைகள் அமைக்கப்பட்டன. இதற்கு அதிக மதிப்பில் விலை பட்டியல் தயாரிக்கப்பட்டு, தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கிய தில் ரூ.53 கோடி இழப்பு ஆகும்.

திடக்கழிவு மேலாண்மைக் காக அதே நிறுவனத்துக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. கூடுதலாக வழங்கியதில் ரூ.26.97 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் டெண்டர் விதியை மீறி கால நீட்டிப்பு செய்து, ஒப்பந்த தொகையை விட ரூ.55 கோடி கூடுதல் செலவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மட்டும் ரூ.150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தெருவிளக்கு கொள்முதல்

மாநகர பகுதியில் தனியார் ஒப்பந்த முறையில் தெருவிளக்கு பொருத்தப்படுகிறது. ஆனால் ஒப்பந்தப்புள்ளியில் உள்ள தெருவிளக்கை விட, கூடுதல் எண்ணிக்கைக்கு பட்டியல் தயாரித்து 2 தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.2½ கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

எல்.இ.டி. விளக்குகளை பொருத்துவதில் மட்டும் ரூ.15 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மாநகராட்சி நிர்வாக பணிகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கணினி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு விலைப்புள்ளி கோரியதற்கான ஆவணங்கள் இல்லை. இதிலும் முறைகேடு நடைபெற்று உள்ளது.

மக்கள் அதிர்ச்சி

24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளை சூயஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த நிறுவனத்திடம் வட்டி வசூலிக்காததால் ரூ.47.92 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. தூய்மை பணிகளுக்கு சில நேரங்களில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக காண்பித்து ரூ.1 கோடியே 81 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளது. இவை அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் தியாகராஜன் பெற்ற தகவல்களில் இடம்பெற்றுள்ளது.

மொத்தம் ரூ.2,300 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்று இருப்பது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT