தமிழக செய்திகள்

தமிழக அரசின் இலவச வேட்டியால் தயாரிக்கப்பட்ட இருமுடி பை: சபரிமலையில் ரூ.300-க்கு விற்பனை!

இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுப்பேட்டை,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குச்செட்டிப் பாளையத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது 35). இவர், தனது நண்பர்களுடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றார். செல்லும் வழியில் நேற்று முன்தினம் பம்பையில் கேரளம் அரசின் தேவசம் போர்டு சார்பில் நடத்தப்படும் கடையில் இருமுடி கட்டுவதற்கான பைகளை நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பக்தர்கள் வாங்கினர்.

அந்த பை, பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டியில் தயாரிக்கப்பட்டு இருந்ததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இரு முடி பை

தமிழக அரசின் முத்திரையுடன் 'பொங்கல் 2025' என்றும், வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பதிவு எண், ரகம். தொகுப்பு எண், முகமை-தமிழ்நாடு பஞ்சாலைக்கழகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1 இரு முடி பை ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கிய வேட்டிகள் எப்படி கேரளம் அரசின் கடைக்கு விற்பனைக்கு வந்தது?. இலவச வேட்டிகள் மொத்தமாக விற்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ள பக்தர்கள், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT