சென்னை,
திவாலாகிறதா ஆவின் நிறுவனம்? வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த சில தினங்களில் மட்டும், கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு ரூ. 2 தள்ளுபடி ரத்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் சுமார் 30 சதவிகிதம் வரை குறைவு, சில ஆவின் நிலையங்களில் ஒருவருக்கு ஒரு லிட்டர் பால் மட்டுமே வழங்கப்படும் என்ற கெடுபிடி, மே மாதத்தில் மட்டும் 10 மாவட்டங்களில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்ட 60 சதவிகிதம் பால் தர விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை என தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் அன்றாட அடிப்படை தேவைக்கு பெருமளவில் நம்பியிருக்கும். ஆவின் நிறுவனத்தில் இதுபோன்ற குளறுபடிகள் தொடருமானால், மக்கள் இரட்டிப்பு விலை கொடுத்து தனியார் பால் நிறுவனங்களேயே நாட வேண்டியிருக்கும். இது தமிழக மக்களை நிதிச்சுமைக்குள் தள்ளுவதோடு. அவர்களின் ஊட்டச்சத்தையும் பலிகடாவாக்கும்.
ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு முந்தைய திமுக அரசு போதிய ஊக்க தொகையை வழங்காததால், பால் கொள்முதல் வீழ்ச்சியடைந்து, அதிக உற்பத்தி செலவு ஏற்பட்டுள்ள நிலையில், ஜோசப் விஜய் தலைமையிலான அரசு ஆவின் பாலின் தரத்திலும், விநியோகத்திலும், பொதுமக்களுக்கு கிடைக்கும் சலுகைகளிலும் சமரசம் செய்து, நஷ்டத்தை ஈடுசெய்ய முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.
இனியும் மக்களின் ஊட்டச்சத்தில் கைவைக்கும் திட்டம் ஏதும் இருந்தால். அதை கைவிட்டு, ஆவினில் நடந்த முறைகேடுகளையும், ஆவின் சந்திக்கும் சவால்களையும் தெளிவாக பட்டியலிட்டு முதல்வர் ஜோசப் விஜய் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும், அமுல் போன்ற பிற மாநில பால் கூட்டுறவு நிறுவனங்களை போல ஆவினும் செழிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.