தமிழக செய்திகள்

“காலை ஆபீஸ்... மாலை வீடு... சனி, ஞாயிறு லீவு” அரசு ஊழியரா முதல்-அமைச்சர் விஜய்? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

விஜய்க்கு எப்படி ஜாக்பாட் அடித்ததோ அதேபோல் தனக்கும் ஜாக்பாட் அடிக்கும் என தனுஷ் நம்புகிறார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது; 6 மாத தவெக ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

அரசு ஊழியராக பணியாற்றும் விஜய்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதை கண்டுகொள்ள வேண்டிய முதல்-அமைச்சர் விஜய், அரசு ஊழியர் போல தலைமை செயலகத்திற்கு காலையில் செல்கிறார், மாலையில் வீடு திரும்புகிறார். சனி, ஞாயிறு விடுமுறை எடுத்துக் கொள்கிறார். மாலை 6 மணி முதல் காலை 9 மணி வரை அதிகாரிகளை அவர் தொடர்பு கொள்வதில்லை. போதை பொருளால் தமிழகம் ஆபத்தான நிலையில் உள்ளது.

காலை ஆபீஸ்... மாலை வீடு... சனி, ஞாயிறு தினங்களில் அரசு ஊழியர்கள் விடுமுறையில் இருப்பதுபோல முதல்-அமைச்சரும் விடுமுறையில் இருக்கிறார்.

நீதிமன்றத்தின் மூலமாக தண்டனை பெற்று சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளையும் பாதுகாக்க முடியவில்லை. முதல்-அமைச்சர் ஆன உடனே மூன்று மாதம் கழித்து முதல்-அமைச்சர் விஜய் புழல் சிறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த வந்து போன 20 நாட்களிலேயே புழல் சிறையில் இருந்து இரண்டு பேர் தப்பித்து ஓடிவிட்டார்கள். இவர் என்ன ஆய்வு செய்தார்? அவர் ஆய்வு செய்தாரா? அல்லது ஜோசியர் சொன்னபடி அங்கே சென்று வந்தாரா? திறமையற்ற அரசாங்கம் இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குழந்தைகள் அடிக்கடி மாயமாகிறார்கள்., சிறுமிகள் அடிக்கடி மாயமாகிறார்கள். இதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

ரூ.20க்கு மின்சாரம் வாங்கியதை ஊழல் என சொல்லி அதனை ரத்து செய்து விட்டு, ரூ.37க்கு ஒப்பந்தம் போட்டு மின்சாரம் வாங்குகிறது தவெக அரசு.

விஜய் போல ஜாக்பாட் அடிக்கலாம்

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்; அதில் என்ன தவறு? திரைப்படத்தில் நடித்து வருகிறார், அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்க்கு எப்படி ஜாக்பாட் அடித்ததோ, அது போல ஜாக்பாட் அடிக்கும் என தனுஷ் நம்புகிறார். அதனால் அதை குறை சொல்வது பொருத்தமாக இருக்காது; ஜனநாயக நாட்டில் யாரும் கட்சி ஆரம்பிக்கலாம்.

டிடிவி, சசிகலா உடன் நாளை சந்திப்பா?

டிடிவி எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். நல்ல உறவில் இருக்கிறார். ஊடகங்கள் இது போன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். பசும்பொன் தேவர் குருபூஜையில், டிடிவி மற்றும் சசிகலாவை சந்திக்கப் போவதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT