சென்னை,
கலெக்டருக்கே ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்து பாதுகாப்பு இல்லை என்பது கேவலம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு த.வெ.க. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் கலெக்டரின் வீட்டிற்கே சென்று தொல்லை அளித்ததாகவும் வருகின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு மாவட்டத்தின் மக்கள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் கலெக்டர். அந்த கலெக்டருக்கே ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்து பாதுகாப்பு இல்லை என்பது கேவலம்.
ஒரு மாவட்டத்தின் கலெக்டர், அம்மாவட்டத்தின் நிர்வாக நீதிபதியும் (District executive Magistrate) ஆவார் , அவருக்கே நீதி இல்லை என்றால், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் முதல்-அமைச்சர் அவர்களே? பதில் என்று எதாவது உங்களிடம் இருந்து முதலில் வருமா?
“உள்ளாடையுடன் நிற்கவைப்பேன்” என்று மிரட்டும் அமைச்சர், மனு கொடுக்க வந்தவரைத் தாக்கி ‘ஆபாச அர்ச்சனை’ செய்து அதை மறைக்க முயலும் துணை சபாநாயகர், எல்லாவற்றிற்கும் மேலாக ‘கலெக்டருக்கே ஆபாச மெசேஜ்’ அனுப்பிய எம்.எல்.ஏ. என்று த.வெ.க. கட்சியைச் சேர்ந்தோர் சட்டம் ஒழுங்கைக் காக்கும் லட்சணம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
தங்கள் கட்சியினர் தவறு செய்தால் வாய்மூடி மவுனியாக இருக்கும் அரசு, மற்ற கட்சியினர் செய்திருந்தால் இன்று அனைத்து மைக்குகள் முன்னரும் ‘செய்தி தொடர்பாளர்’ என்று அழைக்கப்படுவோர் எவ்வளவு பேசியிருப்பர்?
நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது ஆட்சியைக் காப்பற்றிக் கொள்ள, எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் விஜய் பயப்படுகிறாரா? வாக்களித்த மக்களின் பாதுகாப்பை விட, முதல்-அமைச்சர் நாற்காலிதான் ஜோசப் விஜய்க்கு முக்கியமென்று கருதுகிறாரா?
பாலியல் வழக்கு ஒன்றில் தொடர்பு இருந்ததாக ஸ்ரீவைகுண்டம் த.வெ.க. எம்.எல்.ஏ. விஜய் சரவணன் மீது வழக்கே பதியாமல், அவருக்கு சட்டமன்றத்திலேயே ‘நன்னடத்தை சான்றிதழ்’ அளித்து வழக்கை இழுத்து மூடியதுபோல், அதே பார்முலாவை அருள் விக்னேஷுக்கும் பயன்படுத்தப் போகிறதா இந்த அரசு?
முதல்-அமைச்சர் விஜய் ஒரு ஆட்சியாளராக, மாவட்ட கலெக்டருக்கு நடந்த இந்த கொடுமைக்கு எதிராக வழக்கு பதிந்து தன் கட்சி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும். நேர்மையான, அரசியல் குறுக்கீடற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். செய்வீர்களா?”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.