தமிழக செய்திகள்

கல்வி நிலையங்களை கலையரங்குகளாக மாற்ற முயற்சிக்கிறாரா முதல்-அமைச்சர் விஜய்? - நயினார் நாகேந்திரன்

அரசு நிகழ்ச்சிகளுக்குரிய மாண்பை கற்றுக் கொள்ளுமாறு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தவெக அமைச்சர்கள் அருண்ராஜ், சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் பங்குபெற்ற கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், தவெக கட்சியின் பிரத்யேகப் பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ஜோசப் விஜய் முதல்-அமைச்சராக என்றைக்கு பொறுப்பேற்றுக் கொண்டாரோ அன்றில் இருந்து, விளம்பர வெறி முற்றிய தவெகவினரின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

சர்க்கஸ் கூடாரம் போல..

அரசுப் பள்ளிகளில் வகுப்பு நடக்கும் போதே அத்துமீறி நுழைந்து சினிமா வசனம் பேசி ரீல்ஸ் எடுப்பது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்து “விஜய் மாமா வாழ்க” என அவர்களை கோஷம் போட வைத்து ரீல்ஸ் எடுப்பது, அரசு நிகழ்ச்சி என்று கூறி பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று, தவெக சார்பாக சான்றிதழ் வழங்குவது, அரசு நிகழ்வுகளில் தவெகவின் பாடலை ஒலிபரப்புவது என ஒட்டுமொத்த தமிழகத்தையே சர்க்கஸ் கூடாரம் போல தவெகவினர் மாற்ற முயன்றுக் கொண்டிருப்பது அப்பட்டமான விளம்பர அரசியல்.

பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், படிக்கும் பிள்ளைகளை தங்கள் கட்சியின் விளம்பரத் தூதர்களாகவும், அரசு பட்டமளிப்பு விழாக்களை கட்சி கொண்டாட்டங்கள் போலவும் நினைப்பதை நிறுத்தி விட்டு, அரசு நிகழ்ச்சிகளுக்குரிய மாண்பை கற்றுக் கொள்ளுமாறு முதல்-அமைச்சரையும் அவரது அமைச்சரவையையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.