விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுகவின் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் தோல்வி குறித்தும், எடப்பாடி பழனிசாமி மீதும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். அவர் பேசியது பின்வருமாறு;
எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் இன்று மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. வாக்கு சதவீதமும் குறைந்துகொண்டே வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. சீட்டுக்கட்டு போல அதிமுக சரிந்துகொண்டிருக்கிறது. தேர்தலுக்கு தேர்தல் அதிமுகவின் நன்மதிப்பு குறைந்துகொண்டே வருகிறது. தேர்தல் தோல்வியை எடப்பாடி பழனிசாமி உணரவில்லை. தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பொறுப்பு ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார். தோல்வி என்ற சொல்லை கூட உச்சரிக்க மறுக்கிறார்.
பாமக தயவால்தான் 30 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. பாமக கூட்டணி இல்லையென்றால் தேர்தலில் 7 அல்லது 8 தொகுதிகளிலேயே அதிமுக வென்றிருக்கும். கட்சிக்காக பாடுபட்டவர்களை துரோகி என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். கட்சியில் இருந்து கொத்துக்கொத்தாக வெளியேறுகின்றனர். வேதனையுடன் கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை துரோகி என்பதா? நாங்கள் என்ன விரோதிகளா?
தொண்டர்களால் உருவான அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மகனை அரசியலுக்கு கொண்டுவர எடப்பாடி பழனிசாமி நாடகமாடுகிறார். மகனை கட்சிக்குள் கொண்டுவர வேண்டுமென்றால் நேரடியாக கொண்டுவர வேண்டியதுதானே.. தனது குறையை உணராமல் பிறரின் மீது எடப்பாடி பழனிசாமி குறையை சொல்கிறார். உண்மை நிலையை எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும். யாருடைய கருத்தையும், ஆலோசனைகளையும் கேட்கமாட்டேன் என சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறார்.
எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். கட்சியில் இருந்து அதிமுகவினர் வெளியேறுவதை தடுக்க வேண்டும். தேர்தல் தோல்வி குறித்து விசாரிக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதிமுகவை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி இறங்கி வர வேண்டும். அனைவரிடமும் கலந்து பேசுங்கள். அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். அதிமுக தலைமை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும். பொதுக்குழுவை உங்கள் விருப்பப்படியே ஒரு தேதியில் கூட்டுங்கள். கட்சியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து பேச வேண்டும். பொதுக்குழுவை கூட்டவில்லையென்றால் என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும்.”
இவ்வாறு அவர் கூறினார்.