தமிழக செய்திகள்

தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை?

தாராபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைப்பகுதி அருகே த.வெ.க. தொண்டர்கள் குவிய தொடங்கி உள்ளனர்.

திருப்பூர்,

இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து, முதல்-அமைச்சர் விஜய் இன்று (புதன்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

5 முனைப்போட்டி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சத்தியபாமா, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு வருகிற 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா. தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லெட்சுமணன் உள்பட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் 5 முனைப்போட்டி நிலவுகிறது.

முதல்-அமைச்சர் விஜய்

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால், பிரதான கட்சி வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவு கேட்டு அந்த கட்சியின் தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய் இன்று (புதன்கிழமை) தாராபுரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

மதியம் 3 மணிக்கு

இதற்காக தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் கொண்டரசம்பாளையம் மாருதி நகரில் 54 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக மைதானம் தயார் செய்யப்பட்டு பணி நிறைவடைந்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் விஜய் ஆதரவு திரட்டுகிறார்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு 'கியூஆர்' கோடுடன் கூடிய சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்-அமைச்சர் விஜய் புறப்பட்டு மதியம் 1 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைப்பகுதிக்கு மதியம் 3 மணிக்கு வருகிறார்.

முன்னாள் அமைச்சர் செம்மலை

இந்நிலையில் தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக, முதல்-அமைச்சர் விஜய் பயணிக்கும் விமானம், சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவை புறப்பட்டு சென்றது. தற்போது பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைப்பகுதி அருகே த.வெ.க. தொண்டர்கள் குவிய தொடங்கி உள்ளனர்.

இந்த சூழலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை தமிழக வெற்றி கழகத்தில் இன்று இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாராபுரத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து விலகல்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வந்த சூழலில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த செம்மலை அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் எனக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தற்போது அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அக்கட்சியில் பயணிக்க எனது மனம் இடம் தரவில்லை. ஆகையால் தான் தற்போது அதிமுக கட்சியில் இருந்து விலகும் மிக கடினமான முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

தற்காலிக சபாநாயகர்

கடந்த 2001 ஆம் ஆண்டு ஓமலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட செம்மலை, சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆக வெற்றி பெற்றார் செம்மலை. கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்ட சபையில் தற்காலிக சபாநாயகர் ஆகும் இவர் பணியாற்றியுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை.

SCROLL FOR NEXT