மதுரை,
மதுரையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் வீரமணி. வலைத்தளங்களில் வணக்கம் நண்பர்களே... என ஆரம்பித்து மதுரை நடையில் பேசி வீடியோ வெளியிடுவார். நகைச்சுவையாகவும், பிறரை திட்டியும் வீடியோக்களை பதிவிடுவதால், இவர் நெட்டிசன்களின் கண்டனத்துக்கு உள்ளானதும் உண்டு. சில நாட்களுக்கு முன் கேரளாவுக்கு சுற்றுலா செல்வதற்கு பணம் கேட்டு ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில், அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறு கூறி. கியூ.ஆர். கோர்டையும் பகிர்ந்து இருந்தார்.
பின்னர் அதில் ரூ.6 ஆயிரம் வரை சிலர் அனுப்பி வைத்ததாக கூறி, தனது சுற்றுலா வீடியோக்களை வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.
இதற்கிடையே, தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்வோரிடம் 'ஸ்வீட் பாக்ஸ்' வாங்கி அனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்தவர்களுக்கு, தனது வீட்டு முகவரியை வீரமணி பகிர்ந்து இருந்தார். அவர் அனுப்பிய அந்த முகவரியை பார்த்த குறும்புக்கார நெட்டிசன்கள் அவருக்கு பிரபல ஆன்லைன் வர்த்தக தளங்களில் 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் பல பொருட்களை ஆர்டர் செய்து அவரது முகவரிக்கு அனுப்பி உள்ளனர்.
அதன்படி பால் பாக்கெட் முதல், டி.வி., பிரிட்ஜ் உள்பட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் பல பொருட்களை கேஷ் ஆன் டெலிவரி முறையில் அவருக்கு ஆர்டர் செய்து அனுப்பியுள்ளனர். இதனால் ஆன்லைன் நிறுவனத்தினர் பொருட்களை கொண்டு ஒப்படைத்து அதற்குரிய பணத்தை தருமாறு தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். தன் முகவரியையும், தனிப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களையும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதால் இந்த சிக்கலில் அவர் சிக்கி இருப்பதும் தெரியவருகிறது.
விசாரித்ததில், 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டு, பல நிறுவனங்களில் இருந்து அவரது வீட்டுக்கு வாகனங்களில் பொருட்கள் சென்ற வண்ணம் இருந்ததால், ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த வீரமணி, டெலிவரி செய்ய வருவோரிடமும் கடுமையாக நடந்து கொண்டதாக தெரிகிறது.
ஒருவர் ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான தொலைக்காட்சியையும், இன்னொருவர் ஒருபடி மேலேபோய் ஜே.சி.பி. எந்திரத்தையும் செய்திருந்தனர். மற்றொருவர் ரூ.70 கோடி மதிப்பிலான ராணுவ பீரங்கி வரை ஆர்டர் செய்துள்ளதாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார். ஆரம்பத்தில் நெட்டிசன்களின் ஒவ்வொரு தொந்தரவையும் வீடியோவாக பதிவு செய்து. மேலும் பிரபலமாக முயன்றவருக்கு நிலைமை கைமீறி போனதால், தன்னை வைத்து விளையாடுவதை நிறுத்துமாறு, பின்தொடர்பவர்களிடம் கெஞ்சி வீடியோ வெளியிட்டார்.
அதில், இனிப்பு வாங்கி அனுப்புமாறு கேட்டதால் நான் மிகவும் அவதிப்படுகிறேன். உங்கள் காலடியில் நான் மண்டியிடுகிறேன். தயவுசெய்து ஆர்டர் செய்வதை நிறுத்துங்கள். நான் கடுமையான அழுத்தத்தில் இருக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து டெலிவரி பொருட்கள் வருவதால் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறி கையில் பெரிய பைகளுடன் அவர் செல்வதாகவும் ஒரு வீடியோ வெளியாகி, அந்த வீடியோவும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.