தமிழக செய்திகள்

"கேரளா துபாயிலா இருக்கிறது?" கனிமவள லாரிகளை அனுமதிக்கக்கோரி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி,

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற தென்மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டுகிறது. இதில், சட்டவிரோதமாக கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இதனிடையே, தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் உரிய அனுமதியுடன் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்த ஆய்வு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இதனால், கேரள எல்லையில் சோதனைக்காக கனிம வளங்களை ஏறிக்கொண்டு லாரிகள் 2 முதல் 4 நாட்கள் வரை நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கனிமவள லாரிகளை விரைவாக கேரளாவுக்குள் அனுமதிக்கக்கோரி கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகத்தில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் ஆகியோர் மனு அளித்தனர்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

சட்டம் என்பது தமிழ்நாட்டில் ஒரே சட்டம் தான். ஆனால் கன்னியாகுமரிக்கு ஒரு சட்டம், திருநெல்வேலிக்கு ஒரு சட்டம், தூத்துக்குடிக்கு ஒரு சட்டம், காஞ்சிபுரத்திற்கு ஒரு சட்டம் என்று கிடையாது.

மக்களை பாதிக்காத வகையில் தான் இருக்க வேண்டுமே தவிர தொழில் செய்பவர்களின் தொழிலை கெடுக்கக்கூடாது. லாரி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை செய்யக்கூடாது.

அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு 250 லாரிகள் கன்னியாகுமரி எல்லையில் வரிசையாக நிற்கிறது. 4 நாட்களாக காத்திருக்கிறோம் எங்கள் தொழிலே அழிந்துவிடும் என லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் கூறுகின்றனர்’ என்றார்

தென்மாவட்டங்களில் இருந்து தொடர்ச்சியாக கனிமவளங்கள் கடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு கடந்த ஆட்சி காலத்திலேயே இருந்தது. அதை தடுக்கத்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், கேரளா இந்தியாவில் இருக்கிறதா வெளிநாட்டில் இருக்கிறதா? கேரளா துபாயிலா இருக்கிறது? அதானால் எல்லா பொருளும் அங்கேயும் போகும் இங்கேயும் போகும்’ என்றார்.

கேரளாவில் உள்ள கனிமவளங்கள் கடத்தப்படுவதில்லையே? இங்கே உள்ள கனிமவளங்கள் ஏன் கேரளா செல்ல வேண்டும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த அனிதா ராதாகிருஷ்ணன், அவர்கள் தவறு செய்தால் அதே தவறை நாம் செய்யக்கூடாது’ என்றார்.