தமிழக செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 தருவோம் என ஆசை காட்டி, வந்த ரூ.1,000-ஐயும் பறிப்பதா? - நயினார் நாகேந்திரன்

இப்படித் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவது தொடர்கதையாகிவிட்டது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 தருவோம் என ஆசை காட்டி, ஏற்கெனவே வந்த ரூ.1,000-ஐயும் பறிப்பதா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

உதவித் தொகை நிறுத்திவைப்பு?

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தில், கடந்த 2025 டிசம்பர் மாதம் சிறப்பு முகாம் மூலம் இரண்டாம் கட்டமாக சேர்க்கப்பட்ட 16.94 லட்சம் பயனாளிகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்குக் கடந்த மூன்று மாதங்களாக உதவித் தொகை நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள புகார்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. 1.31 கோடி பெண்கள் மாதந்தோறும் பயனடைந்து வந்த இத்திட்டத்தில், தற்போது லட்சக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் வராமல் முடக்கப்பட்டிருப்பது விஜய் தலைமையிலான தவெக அரசின் ஏழைப் பெண்கள் மீதான அலட்சியப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பச்சைத் துரோகம்

2026 சட்டமன்றத் தேர்தலில், “மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவோம்” எனக் கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது மட்டுமின்றி, ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 தொகையையும் நிறுத்தித் தமிழகப் பெண்களுக்குப் பச்சைத் துரோகம் இழைத்துள்ளார். இப்படித் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவது தொடர்கதையாகிவிட்டது.

ரூ.2,500 உதவித் தொகை

எனவே, தேர்தல் வாக்குறுதியை மீறி மகளிரை வஞ்சிக்கும் ஜோசப் விஜய் அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைத் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாகப் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளுக்கும் நிறுத்தப்பட்ட கடந்த மூன்று மாதங்களுக்கான ரூ.1,000 நிலுவைத் தொகையை எவ்விதச் சாக்குப்போக்கும் இன்றி வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் எனவும், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகையைக் காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT