சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (05-06-2026) திமுக அயலக அணி செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எம்.அப்துல்லா செய்தியாளர்களைச் சந்திப்பில் கூறியதாவது:-
கண்ணியத்திற்குரிய பெருமகனார் காயிதே மில்லத் அவர்கள், தன்னுடைய மதச்சார்பற்ற தன்மையாலும் அப்பளுக்கற்ற நேர்மையாலும் இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் இடம்பெற்ற ஒரு உயர்ந்த தலைவராக வாழ்ந்தவர். அவர் வழிவந்த முஸ்லிம் லீக் கட்சியின் இன்றைய தலைவராக இருக்கக்கூடிய மரியாதைக்குரிய பேராசிரியர் காதர் மொகிதீன் சாஹிப், இன்றைக்குப் புதிய கூட்டணியில் இணைந்து அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாலும் கூட, அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள்.
"கவர்னர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது, நாட்டில் நிலையான ஆட்சி வேண்டும்" என்று பல காரணங்களைக் கூறி முதலில் ஆதரவளித்தார்கள்; பின்பு அமைச்சரவையிலும் இடம் பெற்றார்கள். அதைப்பற்றி நமக்கு எந்த விமர்சனமும் இல்லை.
ஆனால், அவர் பேசுகின்ற பேச்சு ஏதோ விஜய் அவர்களின் ரசிகர் மன்றத் தலைவர் போல் இருப்பது உண்மையிலேயே இஸ்லாமியர்களைப் பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்குகிறது. இவரும் தமிழகத்தில் ஒரு மதிக்கத்தக்க தலைவராக இருந்தவர்தான். ஆனால், தன்னுடைய மாண்புகளையெல்லாம் மறந்து இன்றைக்கு விஜய் ரசிகர் மன்றத் தலைவர் போல அங்கே பேசிக் கொண்டிருக்கிறார்.
அவர் அமைச்சராகப் பொறுப்பேற்ற அந்த அறைக்குச் சென்றவர், "நூற்றாண்டு கனவு நிறைவேறியது" என்று சொல்கிறார். நூற்றாண்டு கனவு என்று அவர் எதைச் சொல்கிறார் என்றே தெரியவில்லை! நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்கள் இங்கே அதிகாரம் இல்லாமல் இருந்தார்கள் என்று சொல்கிறாரா? அப்படிப் பார்த்தாலும் கூட, காமராஜரின் அமைச்சரவையில் மஜீத் அவர்கள் அமைச்சராக இருந்தார்.
பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் மரியாதைக்குரிய சாதிக் பாஷா அவர்கள் அமைச்சராக இருந்தார். தலைவர் கலைஞரின் அமைச்சரவையிலும் அவர் இருந்தார். அதற்குப் பிறகு அண்ணன் ரகுமான் கான், அண்ணன் உபயதுல்லா, மைதீன் கான் தொடங்கி இன்றைய கழகத் தலைவரின் அமைச்சரவையிலும் கூட ஆவடி நாசர், அண்ணன் மஸ்தான் போன்ற பல்வேறு இஸ்லாமியர்கள் அமைச்சர்களாக அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள்.
அதிமுக-விலும் கூட எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் ராஜா முகமது அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா அம்மையார் இருந்தபோது நாகூர் மீரான் துவங்கி பலரும் அமைச்சர்களாக இருந்தார்கள்.
இப்படித் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அதிகாரத்தில்தான் இருக்கிறார்கள். ஒருவேளை அவர் சார்ந்த முஸ்லிம் லீக் கட்சி அதிகாரத்தில் இல்லை என்பதை 'நூற்றாண்டு கனவாக'ச் சொல்கிறாரா என்று எடுத்துக்கொண்டால் கூட, அருகில் இருக்கக்கூடிய மாநிலமான கேரளாவில் இப்போது கூட அவர்கள் அமைச்சரவையில் இருக்கிறார்கள்.
ஒன்றிய அரசிலும் கூட, முஸ்லிம் லீக்கினுடைய தலைவராக இருந்த இ. அகமது அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தார். மத்தியிலும் இருந்திருக்கிறார்கள், மாநிலங்களிலும் இருந்திருக்கிறார்கள். ஆக, நூற்றாண்டு கனவு என்று அவர் எதைச் சொல்கிறார் என்று தெரியவே இல்லை!
அமைச்சரவையில் சேர்ந்துவிட்டீர்கள், சேர்ந்ததற்கு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டுப் போங்கள். அதைவிடுத்து, 'நூற்றாண்டு கனவு' என்று சொல்லி, இந்த மாநிலத்தில் இத்தனை காலம் இருந்த திராவிட இயக்கம் எதுவுமே செய்யாததைப் போலப் பேசுவதை உண்மையிலேயே எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அடுத்து, இன்னொரு வார்த்தையையும் அந்த இடத்திலே சொல்கிறார்; "பெரிய மனிதன், பெரிய மனசு" என்று புகழ்கிறார். 'தகைசால் தமிழர்' என்கின்ற விருது, இந்திய அரசு கொடுக்கும் பாரத ரத்னா விருதுக்கு இணையான, தமிழ்நாடு மாநிலத்தின் மிக உயர்ந்த விருது ஆகும். "தமிழர்களிலேயே நீர்தான் பெரிய மனிதர்" என்று சொல்லி, திமுக அரசுதான் அவருக்குத் 'தகைசால் தமிழர்' விருது வழங்கி கௌரவித்தது. ஆனால், இன்றைக்குப் புதிய கூட்டணியில் இருக்கக்கூடிய அமைச்சர் யாரோ ஒருவரைப் பார்த்து, அவர் "பெரிய மனிதர், பெரிய மனதுக்காரர்" என்கிறார். இதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.
IUML வாங்கிய வாக்குகள் அனைத்தும் விஜய் முதல்-அமைச்சராக வரக் கூடாது என்பதற்காக அளிக்கப்பட்டவைதான். குர்பானிக்கு மாடு பலியிடுவதைத் தடுத்த அரசில் அமைச்சர்களாக இருந்த உங்களை நாளைய வரலாறு பழிக்கும். முஸ்லிம் லீக் தவெகவோடு இருக்கலாம் ஆனால் இஸ்லாமியர்கள் எப்போதும் திமுகவோடுதான் இருக்கிறார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.