தமிழக செய்திகள்

கொள்ளை நகரமாக மாறுகிறதா கும்பகோணம்?: 3 நாட்களாக தொடர் திருட்டு - பொதுமக்கள் அச்சம்

காளகஸ்தீஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை,

3 நாட்களில் தொடர் திருட்டு சம்பவங்களால் கும்பகோணம் கொள்ளை நகரமாக மாறுகிறதா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குற்ற சம்பவங்கள்

கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் என 3 போலீஸ் உட்கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டில் கும்பகோணம் கிழக்கு, மேற்கு, தாலுகா, பட்டீஸ்வரம், சுவாமிமலை ஆகிய சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களும், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு, போக்குவரத்து குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களும் இயங்கி வருகின்றன.

மாவட்ட தலைநகரைவிடவும் குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறும் நகரமாக கும்பகோணம் உள்ளது. கும்பகோணம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் எல்லை பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கவலை அளிப்பதாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக கும்பகோணம் கிழக்கு, மேற்கு, தாலுகா, சுவாமிமலை மற்றும் பட்டீஸ்வரம் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.

கோவிலில் திருட்டு

நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் ஜாமியா நகர் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி வெளியாகி உள்ளது. அதே போல் காந்தி நகர் பகுதியில் தனியார் பள்ளியில் புகுந்து ரூ.70 ஆயிரமும், சைக்கிளையும் திருடி சென்றுள்ளனர்.

இதே போல் மடத்து தெருவில் உள்ள காளகஸ்தீஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மோட்டார் சைக்கிள்கள், செல்போன் திருட்டுகள் தொடர்ந்து நடக்கிறது. இவ்வாறு தொடர்ந்து 3 நாட்களில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி உள்ளதால் கும்பகோண் கொள்ளை நகரமாக மாறுகிறதா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முகமூடியுடன் சுற்றித்திரிகின்றனர்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் முகமூடி அல்லது குரங்கு குல்லா அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிகின்றனர். வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களை திருடி செல்கின்றனர்.

இரவு மற்றும் பகலில் தனியாக இருக்கும் பெண்கள், மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி செல்கின்றனர். எனவே, பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன், இத்தகைய குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT