தமிழக செய்திகள்

“ஆபாசம்” தான் உங்கள் அரசியல் ஆயுதமா ராகுல்காந்தி? - நயினார் நாகேந்திரன் கண்டனம்

ராகுல்காந்தியால் அரியணையின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாட்டு மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையை அலங்கரிக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, கொள்கை ரீதியாகவும், சித்தாந்தத்தின் அடிப்படையிலும் எதிர்க்க முடியாத நீங்கள், ஆபாச அரசியலை முன்னெடுத்திருப்பது அருவருக்கத்தக்கது.

வெளிநாட்டு தலைவர்களுடனான நமது நாட்டு பிரதமரின் பரிசுத்த நட்பை இத்தனை கொச்சையாக வர்ணிக்கும் மனநிலை கொண்ட நீங்கள், நிச்சயம் உளவியல் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் தான்.

அரசியலில் 75 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஒரு தேசியக் கட்சியின் வாரிசாக இருந்த போதிலும், பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்த போதிலும், உங்களால் ஏன் அரியணையின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை என்பதை தற்போது நீங்களே நிரூபித்துவிட்டீர்கள். உங்களைப் போன்ற அரசியல் முதிர்ச்சியற்ற ஒருவரால், காங்கிரசின் முடிவுரை எழுதப்படும் என்பதை இந்திரா காந்தி அம்மையார் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.